அதானி குழும மின்சக்தி ஒப்பந்தங்கள் மறுபரிசீலனை: வங்கதேச அரசு திட்டவட்டம்!
அதானி குழும மின்சக்தி ஒப்பந்தங்கள் மறுபரிசீலனை: வங்கதேச அரசு திட்டவட்டம்!
ADDED : நவ 25, 2024 07:10 AM

டாக்கா: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சியின் போது கையெழுத்திட்ட அதானி குழுமத்துடன் எரிசக்தி ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வங்கதேச அரசு திட்டமிட்டுள்ளது.
வங்கதேசத்தில் ஆட்சியில் உள்ள முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சியின் போது கையெழுத்திட்ட மின்சாரம் மற்றும் எரிசக்தி வழங்கல் சட்டத்தின் கீழ் மின்சகத்தி ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்துள்ளது. இந்த குழு, கடந்த 2009ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்து வருகிறது.
இதில் வங்கதேசத்தை சேர்ந்த நிறுவனங்கள் அனைத்தும், முந்தைய அரசுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருவது கண்டறியப்பட்டது. அதானி ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போது, வங்கதேச அதிகாரிகள் உதவி செய்தது கண்டறியப்பட்டது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சியின் போது கையெழுத்திட்ட அதானி குழுமத்துடன் எரிசக்தி ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வங்க அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக அடுத்தக்கட்ட விசாரணையை மேற்கொள்ள விசாரணை அமைப்புகளை சேர்ந்த அதிகாரிகளை உடனடியாக குழுவில் பணி அமர்த்த வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, சூரிய சக்தி மின்சாரத்தை விற்க இந்திய அதிகாரிகளுக்கு, 2,200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி மீது அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது. இது தான் அதானி குழும மின்சக்தி ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்ய முக்கிய காரணம் என்கின்றனர் விசாரணை அதிகாரிகள்.