வங்கதேச ஹிந்து துறவிக்கு 5 மாதங்களுக்கு பின் ஜாமின்
வங்கதேச ஹிந்து துறவிக்கு 5 மாதங்களுக்கு பின் ஜாமின்
ADDED : மே 01, 2025 04:58 AM

டாக்கா : வங்கதேசத்தில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி, மாணவர்கள் போராட்டத்தால் கடந்த ஆகஸ்ட் 5ல் முடிவுக்கு வந்தது. அவர் நாட்டை விட்டு தப்பி, நம் நாட்டில் தஞ்சம் புகுந்தார்.
இதையடுத்து, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. அப்போது வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது ஆங்காங்கே தாக்குதல் நடந்தது. இதனால் ஹிந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி, 2024 அக்டோபரில் சிட்டகாங்கில் ஹிந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வங்கதேச தேசிய கொடியை அவமதித்ததாக, இஸ்கான் எனப்படும் கிருஷ்ண பக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு விசாரணை நீதிமன்றத்தால் தொடர்ந்து ஜாமின் மறுக்கப்பட்டது. இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
சின்மோய் தாஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'அவர் மீதான குற்றச்சாட்டுகள் புனையப்பட்டவை. நீரிழிவு நோய், சுவாச நோய் ஆகியவற்றால் சிறையில் அவர் அவதிப்படுகிறார். விசாரணை ஏதுமின்றி ஒருவரை நீண்ட நாள் கைது செய்து வைத்திருப்பது நியாயமற்றது' என வாதாடினார்.
அரசு தரப்பில், சினோய் கிருஷ்ண தாஸுக்கு ஜாமின் வழங்கினால் சட்டம் - ஒழுங்கு சீர்குலையும், என்றனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சின்மோய் கிருஷ்ண தாஸுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.