இந்திய இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்களுக்கு பலன்: பிரதமர் மோடி
இந்திய இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்களுக்கு பலன்: பிரதமர் மோடி
UPDATED : ஜூலை 24, 2025 05:15 PM
ADDED : ஜூலை 24, 2025 04:29 PM

லண்டன்: இந்தியா பிரிட்டன் இடையே கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால், இந்திய இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறுகுறுநடுத்தர தொழில்துறையினர் பயனடைவார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்தியா பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு பிரதமர் மோடி கூறியதாவது: இந்த ஒப்பந்தம் சாதாரண பொருளாதார ஒப்பந்தம் மட்டும் கிடையாது. பகிரப்பட்ட வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது. ஒரு புறம், இந்திய ஜவுளித்துறை, காலணி, நகைகள், நவரத்தினங்கள், பிரிட்டன் சந்தையை எளிதில் அணுக முடியும். இந்திய விவசாயப் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுக்கு பிரிட்டனின் சந்தையில் புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன், இந்திய இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறுகுறு நடுத்தர தொழில்துறையினனுக்கு பலன் கிடைக்கும். மறுபுறம், மருத்துவ சாதனங்கள் உள்ளிட்ட பிரிட்டனில் தயாராகும் பொருட்கள் சாதாரண விலையில், இந்திய மக்களுக்கும் தொழில்துறையினருக்கும் கிடைக்கும்.
ஆமதாபாத்தில் கடந்த மாதம் நடந்த விமான விபத்தில் பிரிட்டனை சேர்ந்தவர்களும் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர், இரு நாட்டு உறவுகளுக்கு இடையே பாலமாக செயல்படுகின்றனர். அவர்கள் இந்தியாவில் இருந்து படைப்பாற்றல், அர்ப்பணிப்பை கொண்டு வந்துள்ளனர். அவர்களின் பங்களிப்பு, பிரிட்டனின் பொருளாதாரத்தில் மட்டும் அல்ல, விளையாட்டு, கலாசாரம் மற்றும் பொது சேவையிலும் பிரதிபலிக்கிறது. இவ்வாறு பிரதமர் கூறினார்.
பிரிட்டன் பிரதமர் நன்றி
இதன் பிறகு, பிரிட்டன் பிரதமர் கூறியதாவது: ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு கையெழுத்தாகும் முக்கியமான மற்றும் பெரிய ஒப்பந்தம் இதுவாகும். இதுவரை இந்தியா செய்த ஒப்பந்தங்களில் விரிவான மற்றும் முழுமையான ஒன்றாக இது இருக்கும். இதற்காக மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த ஒப்பந்தம் நிறைவேறுவதற்கு பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
இந்த ஒப்பந்தத்தால், இரு நாடுகளுக்கும் பலன் கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதுடன், மக்களின் வாழ்க்கை தரம் உயரும். ஊழியர்களின் பைகளில் பணம் சேரும். வேலைக்கும், வர்த்தகத்துக்கும் சிறப்பானதாக இருப்பதுடன் வரியை நீக்குவதுடன், வர்த்தகத்தை எளிதாகவும் மாற்றுகிறது பிரிட்டன் ஊழியர்களுக்கு சிறந்ததாக உள்ளது. பிரிட்டனில் விற்பனையாகும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களின் விலை குறைவதால் நுகர்வோர்களும் பயனடைவார். நீண்ட காலத்துக்கு பலன் அளிக்கும். பிரிட்டன் பொருளாதாரத்துக்கும், மக்களுக்கும் வருமானத்தை கொண்டு வரும். இவ்வாறு அவர் கூறினார்.