ADDED : நவ 04, 2024 08:05 PM

வாஷிங்டன்: நாளை நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில், நியூயார்க் வாக்காளர்களுக்கு வங்க மொழியிலும் ஓட்டுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
இது குறித்து நியூயார்க் தேர்தல் அமைப்பு நிர்வாக இயக்குனர் மிச்செல் ரியான் கூறியதாவது:
அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக, ஆங்கிலம் தவிர, சீனம், ஸ்பானிஷ், கொரியா மற்றும் வங்கம் ஆகிய நான்கு மொழிகளில் ஓட்டுச்சீட்டுகள் அச்சிட்டு வழங்குகிறோம்.
ஓட்டுச்சீட்டில் வங்க மொழியைச் சேர்ப்பது வெறும் மரியாதையல்ல, சட்டப்பூர்வமான தேவை. நியூயார்க் நகரில் வசிக்கும் வங்க மொழி பேசும் இந்தியர்கள், வங்க தேசத்தவர் நலன் கருதி இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.
நியூயார்க்கிலும் பல்வேறு மொழி பேசும் மக்கள் உள்ளனர். குறிப்பிட்ட ஒரு எல்லைக்குள் இருக்கும் மக்கள் அடர்த்தியை கருத்தில் கொண்டு வங்காளிகளுக்கு இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.
1965ம் ஆண்டு வாக்களிக்கும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெற்காசிய சிறுபான்மையினருக்கு மொழி உதவி வழங்குவதற்காக, அமெரிக்கா, அதன் மாகாணங்களுக்கு உத்தரவிட்ட பிறகு வங்க மொழி ஓட்டுச்சீட்டுகளில் சேர்க்கப்பட்டது.அதனை தொடர்ந்து, 2013ம் ஆண்டு முதல் நியூயார்க் குயின்ஸ் பகுதியில் உள்ள தெற்காசிய சமூகம் வங்க மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஓட்டுச்சீட்டுகளை பெற்று வருகிறது.
இவ்வாறு ரியான் கூறினார்.