அமெரிக்காவின் நவீன ஏவுகணை ரஷ்யா மீது ஏவ பைடன் ஒப்புதல்
அமெரிக்காவின் நவீன ஏவுகணை ரஷ்யா மீது ஏவ பைடன் ஒப்புதல்
ADDED : நவ 19, 2024 02:30 AM

மனாஸ், நீண்ட துாரம் பயணித்து ரஷ்ய நகரங்களுக்குள் சென்று தாக்கக்கூடிய நவீன ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதி அளித்துள்ளார்.
கடந்த இரண்டரை ஆண்டுகளை கடந்தும் முடிவுக்கு வராத ரஷ்யா - உக்ரைன் போர் புதிய வேகத்தை எட்டியுள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது.
உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகள், பொதுமக்கள் வாழும் பகுதிகளை குறிவைத்து, ட்ரோன் மற்றும் ஏவுகணை வாயிலாக ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
மேலும், உக்ரைனிடம் ரஷ்யா இழந்த பகுதிகளை மீட்பதற்காக, வட கொரிய ராணுவம் உதவிக்கு வந்துள்ளது. 12,000 வட கொரிய ராணுவ வீரர்கள் ரஷ்யாவுக்கு வந்திறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப், உக்ரைன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளார். அதோடு, உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவை டிரம்ப் தொடர்வாரா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
போர் துவங்கியது முதலே, பொருளாதார ரீதியாகவும், ஆயுதங்கள் வழங்குவதிலும் உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உதவிகள் செய்து வருகிறார்.
அதே நேரம், அமெரிக்கா வழங்கியுள்ள தொலைதுாரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை தங்கள் ஒப்புதல் இன்றி பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா தாக்குதலை தற்போது தீவிரப்படுத்தி இருப்பதை அடுத்து, அமெரிக்கா வழங்கியுள்ள தொலைதுார இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த ஏவுகணைகள், ரஷ்யாவின் தொலை துார பகுதிகளில் உள்ள முக்கியமான கட்டமைப்புகளை ஊடுருவி தாக்கும் திறன் உடையவை.
'இந்த ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி அளித்தால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்' என, ரஷ்ய அதிபர் புடின் ஏற்கனவே எச்சரித்துள்ள நிலையில், தற்போது போர் பதற்றம் உருவாகி உள்ளது.