தினமும் இரவு வெடிகுண்டு சத்தம்; ஈரானில் படிக்கும் இந்திய மாணவர்கள் கதறல்
தினமும் இரவு வெடிகுண்டு சத்தம்; ஈரானில் படிக்கும் இந்திய மாணவர்கள் கதறல்
UPDATED : ஜூன் 16, 2025 01:01 PM
ADDED : ஜூன் 16, 2025 11:12 AM

டெஹ்ரான்: இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு ஈரானில் படித்து வரும் இந்திய மாணவர்கள் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இஸ்ரேல், ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. இருநாடுகளும் பரஸ்பரமாக வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன. இதுவரையில் ஈரானில் 230 பேரும், இஸ்ரேலில் குழந்தைகள் உள்பட 10 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈரானில் ஆயுத கிடங்கை சுற்றி வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது. இதனிடையே, ஈரான் மற்றும் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், உதவி தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வசதியாக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையே தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தங்களை உடனடியாக அழைத்துக் கொள்ளுமாறு மத்திய அரசுக்கு ஈரானில் உள்ள இந்திய மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள், ஈரானில் உள்ள ஷாகித் பெஹெஸ்தி பல்கலை மற்றும் ஈரான் மருத்துவ பல்கலையில் பயின்று வருகின்றனர். குறிப்பாக, தெஹ்ரானில் உள்ள ஷாகித் பெஹெஸ்தி பல்கலையில் மட்டும் 350 இந்திய மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இதனிடையே, மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு சிறிது கி.மீ., தொலைவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், பீதியடைந்துள்ள இந்திய மாணவர்கள், இந்திய அரசு உடனடியாக தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்திய மாணவர் ஒருவர் கூறுகையில், 'நாங்கள் அபார்ட்மென்டின் அடித்தளத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் இரவு வெடிகுண்டு சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. 3 நாட்களாக தூக்கமில்லாமல் தவித்து கொண்டிருக்கிறோம்.
நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. எனவே, எங்களை உடனடியாக மீட்டு அழைத்து செல்ல இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.