பல்கேரியா மக்கள் போராட்டம் எதிரொலி; கூட்டணி அரசு பதவி விலகியது
பல்கேரியா மக்கள் போராட்டம் எதிரொலி; கூட்டணி அரசு பதவி விலகியது
ADDED : டிச 13, 2025 06:59 AM

சோபியா: ஊழல் மற்றும் சர்ச்சைக்குரிய பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக மக்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தையடுத்து, பல்கேரியாவின் கூட்டணி அரசு நேற்று முன்தினம் தன் பதவியை ராஜினாமா செய்தது.
ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் பிரதமர் ரோசன் செலியாஸ்கோவ் தலைமையிலான கூட்டணி அரசு பதவி வகித்து வந்தது. பட்ஜெட்டில் இடம்பெற்ற வரி உயர்வு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடினர். ஊழல் மற்றும் சர்ச்சைக்குரிய பொருளாதார கொள்கைகளுக்கு எதிரான போராட்டமாக இது மாறியது.
அரசுக்கு எதிராக தலைநகர் சோபியாவில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் லட்சக்கணக்கானோர் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்த அந்நாட்டு அதிபர் ரூமென் ராதேவ், அரசை பதவி விலகுமாறு வலியுறுத்தினார். இதையடுத்து, பிரதமர் ரோசன் தலைமையிலான கூட்டணி அரசு பதவியை ராஜினாமா செய்துள்ளது.

