ADDED : ஆக 21, 2025 07:07 AM

காபூல்; ஆப்கானிஸ்தானில் புலம் பெயர்ந்தோரை ஏற்றி சென்ற பஸ் விபத்தில் சிக்கி தீப்பற்றி எரிந்தது. இதில், 17 குழந்தைகள் உட்பட 71 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், மேற்காசிய நாடான ஈரானில் அகதிகளாக தஞ்சம் அடைந்திருந்தனர். ஆப்கானிஸ்தான் அகதிகளை ஈரான் வெளியேற்றி வருகிறது.
அவ்வாறு ஈரானில் இருந்து திரும்பி வந்த புலம் பெயர்ந்தோர், பஸ் வாயிலாக, ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்துக்கு நேற்று முன்தினம் பயணம் மேற்கொண்டனர். டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், ஒரு டிரக் மற்றும் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், 17 குழந்தைகள் உட்பட 71 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்த விபத்து சமீபத்திய வரலாற்றில் மிகவும் மோசமான போக்குவரத்து பேரழிவுகளில் ஒன்றாகும் என மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது.