கம்போடியா - தாய்லாந்து எல்லை பிரச்னை தீவிரமானது: வான்வழி தாக்குதல்களால் போர் பதற்றம்
கம்போடியா - தாய்லாந்து எல்லை பிரச்னை தீவிரமானது: வான்வழி தாக்குதல்களால் போர் பதற்றம்
UPDATED : ஜூலை 25, 2025 04:00 PM
ADDED : ஜூலை 25, 2025 01:46 AM

பாங்காங்: எல்லை பிரச்னை தொடர்பாக, தாய்லாந்து மற்றும் கம்போடியா ராணுவ வீரர்கள் மோதிக் கொண்டனர். மேலும், வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால், இரு நாட்டுக்கும் இடையே போர் பதற்றம் உருவாகி உள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே, நீண்ட காலமாக எல்லை தொடர்பான பிரச்னை இருந்து வருகிறது. எல்லையில் உள்ள ஹிந்து கோவிலுக்கு, இரண்டு நாடுகளும் பரஸ்பர உரிமை கோருவதே பிரச்னைக்கு முக்கிய காரணம்.
இது தொடர்பான பிரச்னை நீண்ட காலமாக இருந்தபோதும், கடந்த மே மாதத்தில் எல்லையில் மோதல் ஏற்பட்டபோது, கம்போடியா ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதுவே, இரு நாடுகளின் உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தி, தாய்லாந்தில் இருந்து காய்கறி மற்றும் பழங்கள் இறக்குமதி செய்ய கம்போடியா தடை விதித்தது.
அதற்கு பதிலடியாக கம்போடியா உடனான எல்லையை தாய்லாந்து மூடியது. இந்நிலையில், எல்லை பிரச்னை காரணமாக நேற்று மீண்டும் இரு நாட்டு வீரர்களும் மாறி மாறி மோதிக் கொண்டனர். முதலில் தாய்லாந்து, போர் விமானங்கள் வாயிலாக வான்வழி தாக்குதலை நடத்தியதாகவும், அதை தொடர்ந்து கம்போடியாவும் வான்வழி தாக்குதலை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
தாய்லாந்து மாகாணமான சுரின் மற்றும் கம்போடியாவின் ஒட்டார் மீன்ச்சே இடையேயான எல்லையில் உள்ள இரண்டு கோவில்களுக்கு அருகே நேற்று மோதல்கள் துவங்கின. ஏவுணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி, இரு நாடுகளும் தாக்குதல் நடத்தின.
'எப் - 16' ரக போர் விமானங்களை அனுப்பி, கம்போடியாவின் இரண்டு ராணுவ நிலைகளை அழித்ததாக தாய்லாந்து ராணுவம் தெரிவித்தது. கம்போடியா வைத்த கண்ணிவெடியில் சிக்கி ஐந்து தாய்லாந்து வீரர்கள் காயமடைந்ததாகவும் புகார் கூறியது.
இந்த குற்றச்சாட்டை மறுத்த கம்போடியா வெளியுறவுத்துறை, 'தாய்லாந்து வீரர்கள் தான் முதலில் தாக்குதல் நடத்தினர்; துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது' என தெரிவித்தது. ஆனால், தாய்லாந்து ராணுவமோ, 'ஆறு கம்போடியா வீரர்கள் ஆயதங்களுடன் நுழைந்தனர். மேலும், ட்ரோன் தாக்குதல் சத்தம் கேட்டது. இதனால், பாதுகாப்புக்காக தாக்குதல் நடத்தப்பட்டது' என கூறியது.
கம்போடியா நடத்திய தாக்குதல்களில், 11 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தாய்லாந்து கூறியுள்ளது. ஆனால், சேத விபரம் குறித்து கம்போடியா எந்த தகவலையும் வெளியிடவில்லை. கம்போடியா நடத்திய தாக்குதல்களில், 11 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தாய்லாந்து கூறியுள்ளது. ஆனால், சேத விபரம் குறித்து கம்போடியா எந்த தகவலையும் வெளியிடவில்லை.
இந்த மோதலை தொடர்ந்து, பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், இரு நாடுகளும் தங்களின் எல்லைகளை மூடியுள்ளன. அது மட்டுமின்றி, தங்கள் நாட்டில் உள்ள துாதரக ஊழியர்கள் மற்றும் மக்களை வெளியேறும்படி இரு நாடுகளும் பரஸ்பரம் உத்தரவிட்டுள்ளன.
இந்த தாக்குதல்களை தொடர்ந்து, இரு நாட்டு எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.