ஆலிவ் எண்ணெயில் மோசடி: சமையலுக்கு பயன்படுத்தலாமா?
ஆலிவ் எண்ணெயில் மோசடி: சமையலுக்கு பயன்படுத்தலாமா?
ADDED : செப் 28, 2024 12:52 AM

லண்டன்: சர்வதேச அளவில் ஆலிவ் பழ விளைச்சலில் சரிவு ஏற்பட்டுள்ளதால், ஆலிவ் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கலப்படங்கள் அதிகரித்து இருப்பதால், ஆலிவ் எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவது மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடியதாக மாறியுள்ளது.
மத்திய தரைக்கடல் பகுதியில் தான் ஆலிவ் பழங்கள் அதிகம் விளைகின்றன. இங்கு வீசும் வெப்ப அலை மற்றும் வறட்சி காரணமாக, ஆலிவ் பழ விளைச்சல் கடுமையாக சரிந்தது. இதனால், இந்த ஆண்டின் துவக்கம் முதலே உலகம் முழுதும், ஆலிவ் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
இந்த விலை ஏற்றத்தை பயன்படுத்தி பணம் பார்க்க, சில சமூகவிரோத கும்பல்கள் களம் இறங்கி உள்ளன. இந்த ஆண்டு துவக்கத்தில், ஐரோப்பிய யூனியனில் வரலாறு காணாத அளவுக்கு ஆலிவ் எண்ணெயில் மோசடிகள் அரங்கேறி உள்ளன.
முதல் தரம் உடைய ஆலிவ் எண்ணெய், 'எக்ஸ்ட்ரா விர்ஜின்' என்று அழைக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடான இத்தாலியில், 8 கோடி ரூபாய் மதிப்பிலான போலி ஆலிவ் எண்ணெயை கடந்த ஜூலை மாதத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கலப்படம் செய்ய பயன்படுத்தப்பட்ட 623 லிட்டர் குளோரோபில் மற்றும் 71 டன் அளவிலான எண்ணெய் போன்ற திரவமும் பறிமுதல் செய்யப்பட்டது.
தரமான ஆலிவ் எண்ணெயில் கலப்படம் செய்து கொள்ளை லாபம் சம்பாதிக்கும் போக்கு, ஐரோப்பிய யூனியனில் அதிகரித்துள்ளது. ரோம் நகரில் உள்ள 50 உணவகங்களில் கலப்பட ஆலிவ் எண்ணெய்கள் சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. இது, மனித உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் தன்மை உடையது.