கட்சிக்குள் கிளம்பிய எதிர்ப்பால் கனடா பிரதமர் ராஜினாமா
கட்சிக்குள் கிளம்பிய எதிர்ப்பால் கனடா பிரதமர் ராஜினாமா
ADDED : ஜன 07, 2025 06:23 AM

ஒட்டாவா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்ததால், லிபரல் கட்சி தலைவர் பதவி மற்றும் பிரதமர் பதவியை அவர் நேற்று ராஜினாமா செய்தார். புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை, இடைக்கால பிரதமராக நீடிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வட அமெரிக்க நாடான கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 53, தலைமையில் லிபரல் கட்சி ஆட்சியில் உள்ளது.
இங்கு பொருளாதார வளர்ச்சி மந்தம், விலைவாசி உயர்வு, வெளிநாடுகளுடனான வர்த்தக கொள்கைகளில் குழப்பம் போன்ற பிரச்னை நீடிக்கிறது.
தீர்மானம்
இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி, ட்ரூடோவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. அப்போது முக்கிய கூட்டணி கட்சி ட்ரூடோவை ஆதரிக்க மறுத்துவிட்டது.
பிற சிறு கட்சிகளின் ஆதரவை பெற்று, தன் பதவியை ட்ரூடோ தக்க வைத்தார். கனடா பார்லிமென்டுக்கு இந்த ஆண்டு இறுதியில் பொதுத் தேர்தல் நடக்க உள்ளது.
அதில், மக்கள் ஆதரவு எந்த கட்சிக்கு அதிகம் என்ற கருத்துக் கணிப்பு சமீபத்தில் வெளியானது. எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு மிகப்பெரிய ஆதரவு இருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது.
இதனால், ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்தது.
இரண்டாம் கட்ட தலைவர்கள் பலரும் ட்ரூடோ பதவி விலக அழுத்தம் தந்தனர்.
இந்நிலையில், லிபரல் கட்சியின் தலைவர் பதவி மற்றும் ஒன்பது ஆண்டுகளாக வகித்து வந்த பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் நேற்று அறிவித்தார்.
புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை பார்லிமென்டை ஒத்திவைக்க உத்தரவிட்டார்.
தற்காலிக பிரதமர்
கனடா சட்ட விதிகள்படி, பிரதமர் பதவி விலகினால் ஆளும் கட்சி 90 நாட்களுக்குள் புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும். அதுவரை ஜஸ்டின் ட்ரூடோ தற்காலிக பிரதமராக செயல்படுவார்.
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். அதற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய அரசை குற்றம்சாட்டி, விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனால், இரு தரப்பு உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது.