ஹாங்காங்கில் கடலில் விழுந்த சரக்கு விமானம்: இருவர் பலி
ஹாங்காங்கில் கடலில் விழுந்த சரக்கு விமானம்: இருவர் பலி
ADDED : அக் 21, 2025 07:17 AM

பீஜிங்: ஹாங்காங் வந்த சரக்கு விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்து நொறுங்கியதில், இருவர் பலியாகினர்.
ஹாங்காங் சர்வதேச விமான நிலையம், கடலை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு, ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து, 'எமிரேட்ஸ்' நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787 விமானம் நேற்று வந்தது.
துருக்கியில் உள்ள சரக்கு போக்குவரத்து நிறுவனமான ஏர் ஏ.சி.டி., சார்பில் இயக்கப்பட்ட இந்த விமானம், நேற்று அதிகாலை 3:50 மணிக்கு தரையிறங்கியது. வேகமாக இறங்கிய போது விமானிகளின் கட்டுப்பாட்டை மீறி, ஓடுபாதையில் இருந்து விலகி விமானம் கடலில் இறங்கியது.
இதில், விமானத்தின் ஒரு பகுதி பாதியாக உடைந்து கடலில் மிதந்தது. இந்த சம்பவத்தில், ஓடுபாதையை ஒட்டி பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் வாகனம் மீது விமானம் மோதியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில், பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் கடலில் மூழ்கினர்.
அதில், ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பணியில் இருந்த மற்றொரு அதிகாரி மாயமானதை அடுத்து, அவரை தேடும் பணி நடந்து வருகிறது.
சரக்கு விமானத்தில் இருந்த நான்கு ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். விமானம் விழுந்த பகுதிக்கு விரைந்த விமான நிலைய அவசரகால மீட்புக் குழுவினர், அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
விபத்து ஏற்பட்ட வடக்கு பகுதி ஓடுபாதை, சில மணி நேரம் மூடப்பட்டது.