3 மணி நேர தாமதத்துக்கு பின் அமலுக்கு வந்தது போர் நிறுத்தம்; வீடுகளுக்கு திரும்பிய பாலஸ்தீனர்கள்
3 மணி நேர தாமதத்துக்கு பின் அமலுக்கு வந்தது போர் நிறுத்தம்; வீடுகளுக்கு திரும்பிய பாலஸ்தீனர்கள்
ADDED : ஜன 20, 2025 02:51 AM

ஜெருசலேம்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம், நேற்று மூன்று மணி நேர தாமதத்துக்குப் பின் அமலுக்கு வந்தது; இது, காசா பகுதியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகாம்களில் இருந்து தங்களுடைய வீடுகளுக்கு மக்கள் திரும்பத் துவங்கினர்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா உள்ளிட்ட பாலஸ்தீன பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, கடந்த 2023, அக்., 7ல் போர் துவங்கியது.
ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து துவங்கிய இந்தப் போர், பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகியவற்றின் மத்தியஸ்த முயற்சியால், போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.
இதன்படி, ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடித்துச்சென்ற பிணைக் கைதிகளை விடுவிக்கவும், அதற்காக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த போர் நிறுத்தம், நேற்று காலையில் இருந்து துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தான் விடுவிக்கவுள்ள பிணைக் கைதிகளின் முதல் பட்டியலை ஹமாஸ் தராததால், போர் நிறுத்தத்தை அமல்படுத்த முடியாது என, இஸ்ரேல் கூறியது.
இதற்கிடையே, முதற்கட்டமாக விடுவிக்கவுள்ள மூன்று பிணைக் கைதிகளின் பட்டியலை ஹமாஸ் அமைப்பு நேற்று காலை அளித்தது.
இதை ஏற்பதாக இஸ்ரேல் கூறியதால், போர் நிறுத்த நடவடிக்கைகள் துவங்கின. இஸ்ரேல் விடுவிக்கவுள்ள, 90 பாலஸ்தீனர்கள் பட்டியலுக்காக காத்திருப்பதாக ஹமாஸ் கூறியுள்ளது.
இதற்கிடையே, பட்டியல் தர ஹமாஸ் பயங்கரவாதிகள் தாமதம் செய்த நிலையில், காசா பகுதியில் நேற்று காலை வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக கூறப்படுகிறது.
மூன்று மணி நேர தாமதத்துக்குப் பின், போர் நிறுத்த நடவடிக்கைகள் துவங்கியதாக, இருதரப்பும் கூறியுள்ளன. செஞ்சிலுவை சங்கத்தினர் வாயிலாக மூன்று பிணைக்கைதிகள் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதையடுத்து, காசா பகுதியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 15 மாத தாக்குதல்களில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான மக்கள் காசா பகுதிக்குள்ளாகவே இடம்பெயர்ந்தனர்; முகாம்களில் தங்கியிருந்தனர்.
போர் நிறுத்தம் துவங்கியதைத் தொடர்ந்து, இடம் பெயர்ந்த பாலஸ்தீனர்கள், தங்களுடைய பகுதிகளுக்கு திரும்பத் துவங்கிஉள்ளனர். ஹமாஸ் அமைப்பினரும் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டபடி போர் நிறுத்தத்தை கொண்டாடினர்.