மத்திய அரசு முயற்சிக்கு வெற்றி; காலிஸ்தான் பயங்கரவாதி கைது
மத்திய அரசு முயற்சிக்கு வெற்றி; காலிஸ்தான் பயங்கரவாதி கைது
ADDED : செப் 23, 2025 07:24 AM

ஒட்டாவா; மத்திய அரசின் தொடர் முயற்சிகளின் பலனாக, காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுனின் முக்கிய உதவியாளரான இந்தர்ஜித் சிங் கோசல், கனடா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட, 'சீக்ஸ் பார் ஜஸ்டிஸ்' என்ற காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவராக குர்பத்வந்த் சிங் பன்னுன் உள்ளார்.
இந்த அமைப்பின் வட அமெரிக்க நாடான கனடா பிரிவின் அமைப்பாளராக உள்ளவர் இந்தர்ஜித் சிங் கோசல், பன்னுனின் வலது கரமாக கருதப் படுகிறார்.
கனடாவின் ஒட்டாவாவில் துப்பாக்கிகள் வைத்திருந்தது உட்பட பல குற்றச்சாட்டுகளில் கோசல் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் கிரேட்டர் டொரன்டோ பகுதியில் உள்ள ஒரு ஹிந்து கோவிலில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக கோசல் கைது செய்யப்பட்டார். பின்னர் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த நிலையில், மீண்டும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கனடாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நத்தலி ட்ரூயி சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். அவருடன், நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேச்சு நடத்தினார்.
அப்போது, காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே இந்தர்ஜித் சிங் கோசல் கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.