சீனா கருத்தடை சாதனங்களுக்கு கூடுதல் வரி விதிப்பு
சீனா கருத்தடை சாதனங்களுக்கு கூடுதல் வரி விதிப்பு
ADDED : டிச 13, 2025 06:54 AM

பீஜிங்: மக்கள் தொகையை உயர்த்தும் நோக்கத்துடன், கருத்தடை மருந்துகள் மற்றும் கருத்தடை சாதனங்களுக்கு சீனாவில், கூடுதல் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான சீனா, உலகிலேயே அதிக மக்கள்தொகை உள்ள நாடாக நீண்ட காலமாக இருந்தது. தற்போது இந்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது. கடந்த 1980 முதல் 2015ம் ஆண்டு வரை ஒரு குழந்தை போதும் என்ற கொள்கையை பின்பற்றி வந்த சீன அரசு, மக்கள் தொகை குறைந்து வருவதால் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அந்நாட்டு மக்களை ஊக்குவித்து வருகிறது.
கருத்தடை சாதனங்களின் விலையை உயர்த்தினால், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கலாம் என அந்நாட்டு அரசு நம்புகிறது. அதன்படி, வரும் ஜனவரி 1ம் தேதி முதல் கருத்தடை மாத்திரைகள், ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்கள் உள்ளிட்டவை வரி விலக்கு பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது. மேலும், இவை மீது 13 சதவீதம் மதிப்பு கூட்டு வரியும் விதிக்கப்பட உள்ளது.

