ஜப்பான், தைவானை வம்புக்கு இழுக்கிறது சீனா; போர்க்கப்பல்கள் வருகையால் பதற்றம்
ஜப்பான், தைவானை வம்புக்கு இழுக்கிறது சீனா; போர்க்கப்பல்கள் வருகையால் பதற்றம்
ADDED : செப் 25, 2024 10:19 PM

பீஜிங்: ஜப்பான், தைவான் எல்லையில், விமானம் தாங்கி போர்க்கப்பல்களை நிறுத்தி, சீனா பயிற்சியில் ஈடுபட்டுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
தன்னைச் சுற்றியுள்ள எல்லா நாடுகளுடனும் எல்லை பிரச்னைகளை கொண்டுள்ள சீனா, தென் சீனக் கடல் முழுவதையும் சொந்தம் கொண்டாடி வருகிறது.அந்த வழியில் சென்று வரும் மீன்பிடிக்கப்பல்கள், சரக்கு கப்பல்களை அச்சுறுத்தி வருகிறது.
எல்லை நாடுகளின் கடற்படை கப்பல்கள் வந்தாலும் நேருக்கு நேர் மோதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிலையில் சீன கடற்படை தனது மூன்று விமானம் தாங்கிய போர்க்கப்பலை கடந்த வாரத்தில் முதல் முறையாக, சோதனைகளுக்காக இயக்கியது.
சீனா உருவாக்கியுள்ள புஜியன், நவீன வசதிகள் கொண்ட மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் ஆகும். இந்தக் கப்பலும் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து சீன தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மூத்த கர்னல் ஜாங் ஜியோகாங் தெரிவித்ததாவது:
விமானம் தாங்கி கப்பல்களின் போர்த் திறன்களை மேம்படுத்துவதற்காக, மேற்கு பசிபிக் கடலில் வழக்கமான பயிற்சிகளை மேற்கொண்டோம்.
புஜியன் கப்பலுடன், லியோனிங் என்ற சோவியத் காலத்து விமானம் தாங்கி கப்பல், உள்நாட்டில் தயாரிக்கப்பட்டஷான்டாங் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பலும் இந்த பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அண்டை நாடுகளை அச்சுறுத்துவதற்காகவே சீனா இவ்வாறு நவீன போர்க்கப்பல்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.