'அமெரிக்காவின் ஆயுதம் குவாட்' தங்களை அசைக்க முடியாது என்கிறது சீனா
'அமெரிக்காவின் ஆயுதம் குவாட்' தங்களை அசைக்க முடியாது என்கிறது சீனா
ADDED : செப் 24, 2024 02:14 AM
பீஜிங், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவை இடம்பெற்றது குவாட் அமைப்பு. இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் இணைந்து செயல்படுவதற்காக இந்த அமைப்பு, 2-007ல் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவின் இதன் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
இதில் சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல், கடல்சார் உரிமையில் ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என, நான்கு நாடுகளின் தலைவர்கள் கூறினர்.
தென் சீன கடல் பகுதி மற்றும் கிழக்கு சீன கடல் பகுதிகளில் பெரும்பாலானவற்றுக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது.
இது தொடர்பாக, பல நாடுகளுடன் மோதல் போக்கு உள்ளது. குவாட் அமைப்பு துவங்கப்பட்டதில் இருந்து அதற்கு, சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
குவாட் மாநாடு குறித்து, சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறியதாவது:
சீனாவை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், குவாட் அமைப்பை ஆயுதமாக அமெரிக்கா பயன்படுத்துகிறது. சீனாவை நேரடியாகவே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்து பேசியுள்ளார்.
சீனாவுக்கு எதிராக, இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளை இணைத்துக் கொண்டு, அமெரிக்கா தன் ஆசைகளை நிறைவேற்ற துடிக்கிறது.
எந்த நிலை ஏற்பட்டாலும், சீனா தன் இறையாண்மையை விட்டுக் கொடுக்காது; கடல்சார் உரிமைகளையும் விட்டுத் தராது. யார் எந்த முயற்சி செய்தாலும், இந்த உறுதியில் இருந்து சீனாவை அசைத்து பார்க்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

