பிரம்மபுத்திரா அணையால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை என்கிறது சீனா
பிரம்மபுத்திரா அணையால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை என்கிறது சீனா
ADDED : ஜூலை 24, 2025 01:07 AM

பீஜிங்: 'பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்படும் பிரமாண்ட அணையால் இந்தியா, வங்கதேசத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது' என சீனா விளக்கம் அளித்துள்ளது.
அருணாச்சலப் பிரதேச எல்லை அருகே, சீனாவின் நைங்சி நகரில் இருந்து உற்பத்தியாகிறது பிரம்மபுத்திரா. சீன மக்கள் இந்த நதியை யர்லுங் ஜங்போ என அழைக்கின்றனர். தற்போது இந்த நதியின் குறுக்கே ஆண்டுக்கு 300 பில்லியன் கிலோவாட் மின் உற்பத்திக்காக உலகின் மிகப் பெரிய அணையை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது.
இந்த அணை கட்டப்பட்டால், பிரம்மபுத்திரா நதியின் ஓட்டம் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் தடைப்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், இந்தியாவும், வங்கதேசமும் அணை கட்டுவதற்கு ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன. எனினும் அணை கட்டுவதற்கான பணிகளை கடந்த 19ம் தேதி சீனா துவங்கியுள்ளது.
இந்நிலையில், இந்த அணை விவகாரம் கு றித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறியதாவது:
அணை கட்டப்படுவதால், பிரம்மபுத்திரா நதி பாய்ந்தோடும் நாடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மாறாக பிரம்மபுத்திரா நதியில் ஏற்படும் அளவுக்கு அதிகமான வெள்ளப்பெருக்கு தடுக்கப்படும். இதனால், இயற்கை பேரிடர் நிகழ்வது குறையும்.
அணை கட்டும் திட்டம் தொடர்பாக இந்தியா மற்றும் வங்கதேசத்திடம் உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. பிரம்மபுத்திரா பாய்ந்தோடும் நாடுகளின் நலனிலும் சீனா அக்கறை கொண்டுள்ளது.
அணை கட்டுமான திட்டத்தால் ஏற்படும் நன்மை நிச்சயம் இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கும் பகிர்ந்தளிக்கப்படும். அணை கட்டுவது என்பது சீனாவின் இறையாண்மைக்கு உட்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே கடந்த 2015ல் திபெத்தில் மிகப் பெரிய நீர்மின் நிலையத்தை சீனா கட்டியது. அப்போது இந்தியா வெளிப்படுத்திய கவலையை சீனா கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், எதிர்ப்பை மீறி பிரம்மபுத்திராவின் குறுக்கே சீனா அணை கட்டுவது என்பது பொறியியல் துறைக்கு மிகுந்த சவாலாக பார்க்கப்படுகிறது.