படைகளை நிறுத்துவதாக எச்சரித்த ஜப்பான் பிரதமருக்கு சீனா மிரட்டல்
படைகளை நிறுத்துவதாக எச்சரித்த ஜப்பான் பிரதமருக்கு சீனா மிரட்டல்
ADDED : நவ 16, 2025 11:50 PM
பீஜிங்: 'தைவான் கடல் பகுதியில் சீனா போர் கப்பல்களை நிறுத்தி அச்சுறுத்த பார்த்தால், அதை எதிர்கொள்ள ஜப்பானும் படைகளை நிறுத்தும்' என அந்நாட்டு பிரதமர் சனாய் தகாய்ச்சி பார்லிமென்ட்டில் பேசியது சீனாவை ஆத்திரமடை ய செய்துள்ளது.
அச்சுறுத்தல் கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் புதிய பிரதமராக அக்டோபரில் சனாய் தகாய்ச்சி பதவியேற்றார். இவர் நவம்பர் 7ம் தேதி பார்லிமென்ட் கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர், 'தைவான் பிராந்தியத்தில் ஒருவேளை ஜப்பானின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நிலைமை உண்டானால், ஜப்பான் தற்காப்புக்காக படைகளை அனுப்புமா?' என கேட்டிருந்தார்.
இதற்கு பதி லளித்த பிரதமர் தகாய்ச்சி, 'இது ஒரு கற்பனை நிலைமை. இருந்தாலும் தைவான் கடல் பகுதியில் சீனா போர்க் கப்பல்களை நிறுத்துவது, இன்னொரு நாட்டின் பலவீனத்தை பயன்படுத்துவது போன்றவை நடந்தால், அது ஜப்பானின் இருப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்.
'அந்த அச்சுறுத்தல் தாக்குதலாக மாறினால், தற்காப்புக்காக படைகளை நிறுத்தும் உரிமையை நாம் பயன்படுத்துவோம்' என கூறியிருந்தார்.
தைவான், ஜப்பானுக்கு மிக அருகில் உள்ள பகுதி. இதை தன் பிராந்தியத்தின் பகுதியாகவும், ஒரே சீனா என்ற கொள்கையின் கீழ் உள்ளதாகவும் சீனா கூறுகிறது. மேலும், அடிக்கடி அங்கு போர்க் கப்பல்களை நிறுத்துவது, போர் விமானங்களை அனுப்புவது என, தைவானை சீனா மிரட்டி வருகிறது.
இந்நிலையில், ஜப்பான் பிரதமர் கூறிய கருத்து, தங்கள் இறையாண்மைக்கு எதிரானதாக சீனா கருதுகிறது.
பாதுகாப்பு இதையடுத்து சீனாவின் துணை வெளியுறவு அமைச்சர் சன் வெய்டாங், சீனாவுக்கான ஜப்பான் துாதரை அழைத்து எதிர்ப்பை பதிவு செய்தார். சீன ராணுவமும் மிரட்டும் வகையில் செய்தி வெளியிட்டது.
இதற்கிடையே, சீன மக்கள் யாரும் வரும் நாட்களில் ஜப்பானுக்கு செல்ல வேண்டாம். தைவான் பற்றிய ஜப்பானின் ஆபத்தான கருத்துக்களால் சீனர்களுக்கு அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என, ஜப்பானுக்கான சீன துாதரகம் அறிவித்துள்ளது.

