அமெரிக்கா பரஸ்பர வரிகளை முற்றிலும் ரத்து செய்யணும்: சீனா வலியுறுத்துதல்
அமெரிக்கா பரஸ்பர வரிகளை முற்றிலும் ரத்து செய்யணும்: சீனா வலியுறுத்துதல்
ADDED : ஏப் 14, 2025 09:06 AM

பீஜிங்: பரஸ்பர வரி விதிப்பிலிருந்து ஸ்மார்ட்போன்கள், கணினி போன்ற பொருட்கள் மீதான வரி விதிப்புக்கு அதிபர் டிரம்ப் விலக்கு அளித்துள்ளார். அமெரிக்கா பரஸ்பர வரிகளை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என சீனா வலியுறுத்தி உள்ளது.
அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து டிரம்ப் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். மற்ற நாடுகள் தங்களுடைய பொருட்களுக்கு விதிக்கும் வரிக்கு நிகராக பரஸ்பரம் அதே அளவுக்கு வரி விதிப்போம் என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
ஏப்ரல் 2ம் தேதி பல நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி விகிதத்தை டிரம்ப் வெளியிட்டார். பின்னர் திடீரென அவர் சீனாவைத் தவிர மற்ற நாடுகளுக்கான இந்த பரஸ்பர வரியை, 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். அதே நேரத்தில் சீனா மீது, 145 சதவீத வரியை விதித்தார்.
சீனாவும் பதிலுக்கு வரி விதித்ததால் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் தீவிரம் அடைந்தது. இதற்கிடையே பரஸ்பர வரி விதிப்பிலிருந்து ஸ்மார்ட்போன்கள், கணினி உள்ளிட்ட சில குறிப்பிட்ட மின்னணு பொருட்களுக்கு விலக்கு அளித்து, அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா பரஸ்பர வரிகளை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என சீனா வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து சீன வர்த்தக அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: அமெரிக்கா தனது தவறுகளை சரிசெய்ய ஒரு பெரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பரஸ்பர வரிகளை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார். பரஸ்பர வரியில் இருந்து மின்னணு பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், சீனா முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.