மீண்டும் காட்டாட்சிக்கு உலகம் திரும்பிச் செல்வதா: டிரம்புக்கு சீனா சூடு
மீண்டும் காட்டாட்சிக்கு உலகம் திரும்பிச் செல்வதா: டிரம்புக்கு சீனா சூடு
ADDED : அக் 28, 2025 10:01 AM

கோலாலம்பூர்: மலேசியாவில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில், சீனப் பிரதமர் லி கியாங் பேசும்போது அமெரிக்காவின் வரி விதிப்பு முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். உலகம் மீண்டும் காட்டாட்சி முறைக்கு செல்லக்கூடாது என்று அவர் கூறினார்.
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப்- சீன அதிபர் இடையே மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. அமெரிக்காவுக்கு பதிலடி தரும் விதமாக அரிய வகை கனிமங்களை ஏற்றுமதி செய்வதில் சீனா கட்டுப்பாடு விதித்தது.
இதையடுத்து நவ., 1ம் தேதி முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீன பொருட்களுக்கும், 100 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்தார். இந்த வரி விதிப்பு நிரந்தரமானது அல்ல என்றும் அடிக்கடி கூறுகிறார்.
எனினும் இத்தகைய வரிவிதிப்புக்கு சீனா கடும் அதிருப்தியை தெரிவித்து வருகிறது.
ஆசியான் உச்சி மாநாட்டில், சீன பிரதமர் லி கியாங் பேசியதாவது: வர்த்தக விஷயங்களில், உலகம் மீண்டும் காட்டாட்சிக்கு திரும்பி செல்லக் கூடாது.
வலிமையானவர்கள் பலவீனமானவர்களை கொடுமைப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் பேசினார். சீனப் பிரதமர் லி கியாங், தென் கொரியாவில் ஜி ஜின்பிங் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையேயான சந்திப்புக்கு சில நாட்களுக்கு முன்பு உலகில் வர்த்தக விஷயங்களில் ஒருதலைப்பட்சத்தை கண்டித்தார்.

