சீன அதிபர் - தாய்லாந்து மன்னர் சந்திப்பு இருதரப்பு உறவை வலுப்படுத்த உறுதி
சீன அதிபர் - தாய்லாந்து மன்னர் சந்திப்பு இருதரப்பு உறவை வலுப்படுத்த உறுதி
ADDED : நவ 15, 2025 12:38 AM

பீஜிங்: சீனா சென்றுள்ள தாய்லாந்து மன்னர் வஜிரலோங்கோர்ன், அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேசினார்.
சீனா உடனான, 50 ஆண்டுகால துாதரக உறவு நிறைவு பெற்றதையொட்டி, தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் மன்னர் வஜிரலோங்கோர்ன், மனைவியுடன் பீஜிங் சென்றார். கடந்த 2016ம் ஆண்டு மன்னராக அரியணை ஏறிய பின் அவர் சீனா செல்வது இதுவே முதல்முறை.
சீன அதிபர் ஷீ ஜின்பிங், தாய்லாந்து மன்னர் வஜிரலோங்கோர்ன், அரசி சுதிடா ஆகியோரை வரவேற்று விருந்து அளித்தனர். பின்னர் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும், பேச்சு நடத்தினர்.
தாய்லாந்தில் இருந்து வேளாண் இறக்குமதியை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு துறைகளில், ஒத்துழைப்பை மேம்படுத்தவும் சீன அதிபரும், தாய்லாந்து மன்னரும் ஒப்புதல் அளித்தனர். சமீப காலமாக, தாய்லாந்தில் அதிக முதலீடுகளை சீனா செய்து வருகிறது.
குறிப்பாக பல சீன நிறுவனங்கள் அமெரிக்காவின் வரிகளைத் தவிர்ப்பதற்காக தென்கிழக்கு ஆசியாவிற்கு உற்பத்தியை மாற்றியுள்ளன.

