ADDED : செப் 09, 2025 07:01 AM

பொ கொடா: கொலம்பியாவில் கிளர்ச்சியாளர்கள் செல்வாக்கு அதிகமுள்ள பகுதியில், சட்டவிரோதமாக பயிரிடப்பட்டுள்ள பயிர்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட 45 ராணுவ வீரர்கள் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் உள்ள மிகாய் கேன்யான் பகுதி, கிளர்ச்சியாளர்கள் கோட்டையாக விளங்குகிறது. முன்னாள் புரட்சி ஆயுதப் படையில் இருந்து பிரிந்த இவர்கள் ராணுவ நிலைகளையும் அடிக்கடி தாக்கி வருகின்றனர்.
இந்நிலையில், சட்டவிரோதமாக பயிரிடப்படும் கோகோ பயிர்களை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வந்திருந்த 45 ராணுவ வீரர்களை, 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுற்றிவளைத்து கடத்தி சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது, ஒரு மாதத்திற்குள் நடந்த இரண்டாவது கடத்தல் சம்பவமாகும்.
முன்னதாக கடந்த மாதம் கவ்ரியார் பகுதியில் ராணுவத்துடன் நடந்த துப்பாக்கி சண்டையில், கிளர்ச்சியாளர்கள் 10 பேர் கொல்லப்பட்டனர்.
அவர்களது உடலை ஒப்படைக்கக் கோரி, 33 ராணுவ வீரர்களை கிராமத்தினர் கடத்தி சிறைபிடித்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.