மாயாஜால கார் ; மந்திரம் போட்டாலும் நிற்காது; அமெரிக்காவில் ஸ்டாலின் ஏன் பயணித்தார் ?
மாயாஜால கார் ; மந்திரம் போட்டாலும் நிற்காது; அமெரிக்காவில் ஸ்டாலின் ஏன் பயணித்தார் ?
UPDATED : செப் 03, 2024 02:48 PM
ADDED : செப் 03, 2024 01:34 PM

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜாகுவார் நிறுவனத்தின் டிரைவர் இல்லாத ஆட்டோமேட்டிக் காரில் முதல்வர் ஸ்டாலின் அமர்ந்து பயணம் செய்த வீடியோ இணையதளத்தில் ராக்கெட் வேகத்தில் வைரலாகி வருகிறது. இந்த கார் சேவையை ஆப்-ல் புக் செய்து மக்களும் பயன்படுத்தும் வகையில் இயக்கப்படுகிறது.
தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 17 நாட்கள் அரசு முறைப் பயணமாக முதல்வர் ஸ்டாலின், அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு முதலீட்டாளர்களை சந்தித்து ஸ்டாலின் அழைப்பு விடுத்து வருகிறார். ஏராளமான நிறுவனங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வருகின்றன.
சான்பிரான்சிஸ்கோவில் நடந்த அமெரிக்க வாழ் தமிழர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற முதல்வர் ஸ்டாலின், ஜாகுவார் நிறுவனத்தின் டிரைவர் இல்லாத தானியாங்கி காரில் பயணம் செய்தார். டிரைவர் இல்லாத ஆட்டோமேட்டிக் காரில் முதல்வர் ஸ்டாலின் அமர்ந்து பயணம் செய்த வீடியோ இணையதளத்தில் ராக்கெட் வேகத்தில் வைரலாகி வருகிறது.
இனி வரும் உலகம்
அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் , 'இன்று உலகத்தின் வேறுபல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும் அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை எல்லாம் அந்நாட்டவர்கள், பழையவற்றோடு திருப்தி அடைந்து அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி அப்பழையவற்றையே தேடிக்கொண்டு திரியாமல், புதியவற்றில் ஆர்வங்கொண்டு, நடுநிலைமை அறிவோடு, முயற்சித்ததின் பலனாலேயே ஏற்பட்டவை.இனி வரும் உலகம்!' என பதிவிட்டு இருந்தார்.
முதல்வர் ஸ்டாலின் பயணித்த தானியங்கி கார் குறித்து சுவாரஸ்யமான விஷயங்கள் பின்வருமாறு:
* டிரைவர் இல்லாத காரை ஜாக்குவார் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த காரை மக்களும் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மக்கள் புக் செய்து டாக்ஸி போல பயன்படுத்தி கொள்ளலாம்.
* இந்த காரை பயன்படுத்த ஆப்-ல் புக் செய்தால் நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்துவிடும்.
* காரில் ஏறி அமர்ந்து உடன், நீங்கள் செல்ல வேண்டி இடத்திற்கான முகவரியை கிளிக் செய்ய வேண்டும். நீங்கள் செல்ல வேண்டிய இடத்தில், கார் தானாக சென்று விடும்.
* அமெரிக்காவில் குறிப்பிட்ட பகுதிகளில், மட்டும் இந்த கார் பயன்பாட்டில் இருக்கிறது. காரில் 29 கேமராக்கள், ரேடார், லைடார் உள்ளிட்ட கருவிகள் உள்ளன.
* இந்த கருவிகள், கார் சாலையில் செல்லும் போது தானியங்கி முறையில் எந்த வாகனத்தின் மீதும் மோதாமல் செல்ல பொருத்தப்பட்டுள்ளன.
* இந்த காரை தற்போது யாரும் சொந்தமாக வாங்க முடியாது. வேமோ நிறுவனம் இந்த காரை டாக்ஸி பயன்பாட்டிற்காக சொந்த நிறுவனம் மூலம் நடத்தி வருகிறது.
ஆள் இல்லாமல் காரில் மன அமைதியுடன், நிம்மதியாக செல்ல விரும்புவோர் இந்த கார் சேவையை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த கார் சேவை பற்றி அமெரிக்காவில் தெரியாத மக்களே கிடையாது. டிரைவர் இல்லாத கார் மக்கள் மத்தியில் கெத்தாக இடம் பிடித்துள்ளது.