டிரம்ப் பதவியேற்கும் முன் திரும்பி வாருங்கள்; மாணவர்களுக்கு அமெரிக்க பல்கலை எச்சரிக்கை
டிரம்ப் பதவியேற்கும் முன் திரும்பி வாருங்கள்; மாணவர்களுக்கு அமெரிக்க பல்கலை எச்சரிக்கை
ADDED : டிச 01, 2024 07:42 AM
வாஷிங்டன் : 'டிரம்ப் அதிபராக பதவியேற்கும் முன் திரும்பி வாருங்கள்' என, அமெரிக்க பல்கலைகளில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு, அந்த பல்கலைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
கடந்த மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இவர், வரும் ஜனவரி 20ம் தேதி பதவியேற்க உள்ளார். அதிபராக பதவியேற்ற பின்னர், நிர்வாக ரீதியாக மேற்கொள்ளப்பட இருக்கும் மாற்றங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து டிரம்ப் அறிவித்து வருகிறார்.
இந்த சூழலில், தங்களிடம் படிக்கும் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை, டிரம்ப் பதவியேற்கும் முன் திரும்பி வருமாறு அமெரிக்க பல்கலைகள் எச்சரித்துள்ளன.
அவர் அதிபராக பதவியேற்ற பின்னர், சர்வதேச பயணங்கள் தொடர்பாக கட்டுப்பாடுகள் அல்லது தடைகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில், அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் பல்கலை, அதன் சர்வதேச மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக கடிதம் அனுப்பியது. அதில், 'டிரம்ப் அதிபராக பதவியேற்கும் முன் குளிர்கால விடுமுறையில் இருந்து மீண்டும் வளாகத்திற்கு திரும்புங்கள். கடந்த 2016ல் டிரம்பின் முந்தைய ஆட்சிக் காலத்தில் பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அது தொடர்பான முந்தைய அனுபவத்தின் அடிப்படையில், இந்த எச்சரிக்கை விடப்படுகிறது' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
வெஸ்லியன், யேல் உள்ளிட்ட பல்கலைகளும் இது தொடர்பான அறிவுறுத்தலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கியுள்ளன. கடந்த 2016ல், முதன்முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப், வெளிநாட்டு மாணவர்கள் விசா மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். பல முஸ்லிம் நாடுகளின் குடிமக்கள், வட கொரியா மக்கள் அமெரிக்காவிற்கு வருவதையும் அவர் தடை செய்தார்.
இதனால், சில மாணவர்கள் அமெரிக்காவில் தங்கள் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதே நிலை, இந்த முறையும் ஏற்படலாம் என்பதால் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக அங்குள்ள கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க பல்கலைகளில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் 54 சதவீதம் பேர் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள்.