ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முழுஅடைப்பு போராட்டம் வன்முறையாக மாறியது
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முழுஅடைப்பு போராட்டம் வன்முறையாக மாறியது
ADDED : ஜூலை 05, 2026 10:07 PM
இஸ்லாமாபாத்:அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதில் அனாப் பகுதியில் நடந்த வன்முறையில், ஒருவர் கொல்லப்பட்டார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில், அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களாக இந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. கூட்டு அவாமி நடவடிக்கைக் குழு என்ற பெயரில் இந்தப் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தகவல் தொடர்பு வசதியை மீட்க வேண்டும், தடையில்லா உணவு - மருந்து வினியோகம், அரசு மற்றும் ராணுவத்தின் கட்டுப்பாடுகள் நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், அனாப் பகுதியில், போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது போலீசாரும், ராணுவத்தினரும் திடீர் தாக்குதல் நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் போராட்டத்தை கலைக்க முயன்றனர்.
அப்போது இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் வெடித்து, வன்முறையாக மாறியது. இதில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் பலர் காயமடைந்தனர்.
