பாகிஸ்தானுடன் தொடரும் மோதல்; ஆப்கானிஸ்தான் பதில் தாக்குதல்
பாகிஸ்தானுடன் தொடரும் மோதல்; ஆப்கானிஸ்தான் பதில் தாக்குதல்
UPDATED : மார் 03, 2026 11:27 PM
ADDED : மார் 03, 2026 09:42 PM

காபூல்: பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான மோதல் 5வது நாளாக இன்றும் தொடர்ந்தது. பாகிஸ்தான் தளங்கள் மீது ஆப்கானிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தியது.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் உள்ள டி.டி.பி., எனும் தெஹ்ரீக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்புக்கு இடையே மோதல் உள்ளது. இதற்கிடையே, டி.டி.பி., பயங்கரவாதிகளை குறி வைத்து, ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு, பாகிஸ்தான் மீது பதில் தாக்குதல் நடத்தியது.
தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் தாக்குதல் நடந்தது. இதில், பாகிஸ்தானின் தளங்கள் மீது ஆப்கானிஸ்தான் படைகள் தாக்கின. இது குறித்து ஆப்கன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது: கோஸ்டில் உள்ள அலி - ஷெர் மாவட்டம், ஜலாலாபாத் மற்றும் கந்தஹார் உள்ளிட்ட துராந்த் எல்லை கோட்டு பகுதியில் உள்ள பல முக்கிய ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.
குறிப்பாக, கந்தஹார் மாகாணத்தின் ஸ்பின் போல்டாக் மற்றும் ஷோரபாக் மாவட்டங்களில், பாகிஸ்தானிடம் இருந்து ராணுவ நிலைகள் மீட்கப்பட்டன.இதில், மூன்று பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டார். அலி - ஷெர் மாவட்டத்தில் இரு பாகிஸ்தான் நிலைகள் மீட்கப்பட்டன. இவ்வாறு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு படைகள் நேற்று இரவில் இரு வேறு இடங்களில் நடத்திய தாக்குதலில் 67 ஆப்கன் தலிபான் வீரர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை ஆப்கன் தென்மேற்கு எல்லை பகுதியில் 16 இடங்களில் ஆப்கன் நடத்திய தாக்குதல்களை பாகிஸ்தான் முறியடித்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கை: பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதல்களில், 435 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர்; 630 பேர் காயமடைந்துள்ளனர். 188 டாங்குகள் மற்றும் கவச வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளன. 31 ஆப்கன் புற காவல் நிலையங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் முழுதும் 51 இடங்களில் வான்வழி தாக்குதல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

