பூனைக்குட்டி வெளியே வந்திடுச்சு... காங்கிரஸ், பாகிஸ்தான் எண்ணம் ஒன்றுதான்: பாக்., அமைச்சரின் பேச்சால் பரபரப்பு
பூனைக்குட்டி வெளியே வந்திடுச்சு... காங்கிரஸ், பாகிஸ்தான் எண்ணம் ஒன்றுதான்: பாக்., அமைச்சரின் பேச்சால் பரபரப்பு
UPDATED : செப் 19, 2024 02:42 PM
ADDED : செப் 19, 2024 12:14 PM

இஸ்லமாபாத்: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாகிஸ்தானின் எண்ணமும் ஒன்று தான் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் நேற்று நடந்து முடிந்த நிலையில், 2வது கட்ட தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது. பிரதமர் மோடி இன்று பேரணி நடத்த இருக்கிறார்.
பிராந்திய கட்சியான ஒமர் அப்துல்லாவின் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, ஆட்சியைப் பிடித்தால் 370 சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் என்று வாக்குறுதி அளித்து வருகிறது. அதே கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் இந்த விவகாரத்தில் வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறது. குறிப்பாக, காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியில் கூட, 370 சட்டப்பிரிவு குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை.
இந்த நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், கூறியிருப்பது இந்தியாவில் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஜம்மு காஷ்மிர் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணிக்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கம், பாகிஸ்தானைப் போல, தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணியிடமும் இருக்கிறது, எனக் கூறினார்.
இதனிடையே, காங்கிரஸ் இந்திய நலனுக்கு விரோதமான கட்சி என்று பா.ஜ., ஐ.டி., விங்கின் தலைவர் அமித் மால்வியா விமர்சித்துள்ளார். அதேபோல, 'பூனைக் குட்டி வெளியே வந்துவிட்டது. இதுக்கு மேலயும் சந்தேகம் வேண்டுமா? பிரதமர் மோடியை எதிர்ப்பதற்காக, பாகிஸ்தான் பக்கம் நிற்கிறார்கள்', என்று காங்கிரஸ் மீது பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ஷெஷாத் பூனவல்லா குற்றம்சாட்டியுள்ளார்.