டொனால்டு டிரம்பை கொல்ல சதி? ஈரான் மீது குற்றச்சாட்டு!
டொனால்டு டிரம்பை கொல்ல சதி? ஈரான் மீது குற்றச்சாட்டு!
ADDED : நவ 09, 2024 11:48 PM
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, டொனால்டு டிரம்பை கொலை செய்ய, மேற்காசிய நாடான ஈரான் சதித்திட்டம் தீட்டிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் கடந்த 5ல் நடந்த அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சியான குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, வெற்றி பெற்றார். ஆளும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார்.
முறியடிப்பு
அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், 2025 ஜன., இறுதியில் முறைப்படி பதவியேற்க உள்ளார். தேர்தல் பிரசாரத்தின் போதே, அவரை கொலை செய்ய முயற்சிகள் நடந்தன.
ஜூலையில் பென்சில்வேனியாவில் நடந்த பிரசாரத்தில், டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், அவரது காதில் காயம் ஏற்பட்டது. மற்றொருகொலை முயற்சி முறியடிக்கப்பட்டது.
இந்நிலையில், அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, டொனால்டு டிரம்பை கொலை செய்ய ஈரான் சதித்திட்டம் தீட்டிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக, மன்ஹாட்டனில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள புகார்:
ஈரானின் துணை ராணுவப் புரட்சிக் காவலர் படையைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி, செப்டம்பரில் டொனால்டு டிரம்பை கொலை செய்ய, கூலிப்படையைச் சேர்ந்த பர்ஜாத் ஷகேரி என்பவரை அணுகி உள்ளார். அவரால் கொலைக்கான திட்டத்தை தயார் செய்ய முடியவில்லை.
'அதிபர் தேர்தல் முடியும் வரை கொலை திட்டத்தை ஈரான் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்து விடுவார். அதன் பின், அவரை எளிதாக கொலை செய்து விடலாம்' என, அந்த ராணுவ அதிகாரி பர்ஜாத் ஷகேரியிடம் தெரிவித்துள்ளார்.
அறிவுறுத்தல்
இதன்பின், தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன், டிரம்பை கொலை செய்ய பர்ஜாத் ஷகேரிக்கு அறிவுறுத்தப்பட்டது.
எனினும் அவரால் அந்த காலக்கெடுவுக்குள் திட்டத்தை தீட்ட முடியவில்லை. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.