புனிதத்தலங்களில் தொடரும் தொல்லை; பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களால் கடுப்பான சவுதி அரேபியா!
புனிதத்தலங்களில் தொடரும் தொல்லை; பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களால் கடுப்பான சவுதி அரேபியா!
UPDATED : செப் 25, 2024 10:56 PM
ADDED : செப் 25, 2024 10:03 PM

இஸ்லாமாபாத்: ஆன்மிக சுற்றுலா விசாவை பயன்படுத்தி விமானத்தில் வந்திறங்கும் பாகிஸ்தானியர்கள், பிச்சை எடுக்கும் வேலையில் ஈடுபடுவது பற்றி சவுதி அரேபியா தன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
மெக்கா, மெதினா உள்ளிட்ட புனிதத்தலங்களுக்கு இஸ்லாமியர்கள் வந்து செல்வதற்காக, சவுதி அரேபியா அரசு, சிறப்பு விசா வழங்குகிறது. அதை பயன்படுத்தி உலகம் முழுவதும் இருந்து இஸ்லாமியர்கள் சென்று வருகின்றனர்.
அந்த வகையில், பாகிஸ்தானில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள், மெக்கா, மெதினாவுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர். ஆனால், பக்தர்களின் போர்வையில், விசாவைப் பெற்று சவுதி அரேபியா செல்லும் பாகிஸ்தானியர்கள் பலர், சவுதி நகரங்களின் வீதிகளில், பிச்சை எடுப்பது அதிகரித்து விட்டது.
இதை தடுக்கும் விதமாக, சவுதி அரேபியாவின் மத விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் சார்பில் பாகிஸ்தானுக்கு ஓர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆன்மிக விசாவை பயன்படுத்தி சவுதி அரேபியாவுக்கு வந்து பிச்சை எடுப்பவர்களை கட்டுப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த உஸ்மான் என்பவர், ' நான் தற்போது தான் ஆன்மிக சுற்றுலாவுக்கு சென்று விட்டு வந்தேன். பாகிஸ்தானியர் என்று சொல்வதற்கே அவமானமாக உள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள வீதிகளில் பாகிஸ்தான் மக்கள் பிச்சை எடுப்பதை கண்கொண்டு பார்க்க முடியவில்லை,' என்று வருத்தப்பட்டு பதிவு போட்டுள்ளார்.
சவுதி அரேபியாவில் மட்டுமின்றி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற மத்திய கிழக்கு நாடுகளிலும் பாகிஸ்தானைச் சேர்ந்த பிச்சைக்காரர்கள் சுற்றுலாப் பயணிகளை தொந்தரவு செய்து வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம், வெளிநாடுகளில் சுற்றித்திரிந்த 90 சதவீத பாகிஸ்தானைச் சேர்ந்த பிச்சைக்காரர்களை பிடித்து விட்டதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை செயலாளர் ஷுஷான் கான்ஷாடா கூறியிருந்தார்.
மேலும்., பாகிஸ்தானில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று பிச்சை எடுப்பவர்களின் பின்னால், ஒரு மாபியா கும்பலே இருப்பதாகவும், அதனை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் கூட வெளிநாடுகளுக்கு விமானத்தில் சென்று பிச்சை எடுப்பதற்காக புறப்பட்ட 11 பேரை கராச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் மடக்கி பிடித்துள்ளனர்.
வெளிநாடுகளுக்கு பிச்சை பெறுவதற்காக செல்பவர்களினால், உண்மையாகவே ஆன்மிக சுற்றுலாச் செல்வர்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர்கள் மீதும் அதிகாரிகள் சந்தேகப் பார்வையில் பார்ப்பதால், நிம்மதியாக, சென்று வர முடியவில்லை என்று பாகிஸ்தான் மக்கள் புலம்புகின்றனராம்.
இது மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு உண்மையாகவே வேலை தேடிச் செல்லும் பாகிஸ்தானியர்களும், மற்ற நாடுகளின் துாதரகங்களில் தேவையற்ற விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று அந்நாட்டினர் வருத்தப்படுகின்றனர்.