மேற்கு ஆப்ரிக்க நாட்டில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சி முறியடிப்பு
மேற்கு ஆப்ரிக்க நாட்டில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சி முறியடிப்பு
ADDED : டிச 08, 2025 12:11 AM

கோட்டோனுா: மேற்கு ஆப்ரிக்க நாடான பெனினில், ராணுவத்தின் ஒரு பிரிவினர் அரசை கவிழ்த்துவிட்டதாக அறிவித்த நிலையில், ஆட்சி கவிழ்ப்பு முறியடிக்கப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்ரிக்காவின் பெனின் நாட்டில் அதிபர் பத்ரிஸ் டேலன் தலைமையிலான ஆட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாகவும், அரசு மற்றும் அரசு துறை நிறுவனங்கள் அனைத்தும் கலைக்கப்பட்டு விட்டதாகவும், நேற்று அதிகாலை ராணுவத்தின் ஒரு பிரிவினர் அரசு தொலைக்காட்சியில் அறிவித்தனர்.
ஆட்சி கவிழ்ப்பு செய்ததாக அறிவித்தவர்கள் தங்களை புனரமைப்புக்கான ராணுவக்குழு என்று அழைத்துக்கொண்டனர். இக்குழுவுக்கு தலைவராக கர்னல் பாஸ்கல் டிகிரி நியமிக்கப்பட்டதாகவும் அறிவித்துக்கொண்டனர்.
இந்த அறிவிப்பு வெளியான பின், அந்நாட்டில் சில மணி நேரங்கள் பதற்றம் நீடித்தது. அதன்பின், அந்நாட்டு ராணுவ படைகள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், ஆட்சி கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டதாகவும் பெனின் நாட்டின் உள்துறை அமைச்சர் அலசேன் செய்தோ தெரிவித்தார்.
இந்நிலையில், ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு அதிபர் டேலனின் நிர்வாகத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளே காரணம் என்று கூறப்படுகிறது.
சமீபகாலமாக, மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ராணுவ புரட்சி வாயிலாக அரசுகள் கவிழ்க்கப்பட்டு வரும் பின்னணியில், இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சி இங்கும் அரங்கேறியுள்ளது. இருப்பினும், பெனின் அரசு அதை லாவகமாக கையாண்டு முறியடித்துள்ளது.

