ADDED : ஏப் 22, 2026 01:03 AM

உ.பி.,யில் தேடப்பட்ட ரவுடி டில்லியில் சுட்டு பிடிப்பு
புதுடில்லி: உத்தர பிரதேச மாநில அரசால், 15 ஆயிரம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த ரவுடி, டில்லி போலீசில் சிக்கினார். அவரை போலீசார், சுட்டு பிடித்தனர்.
முகமது ரிஸ்வான் என்பவர், டில்லி அருகே உள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் பல குற்றங்களை செய்து, போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பி வந்தார். அவரை பிடிக்க அந்த மாநில போலீசார் பல நடவடிக்கைகளை எடுத்து வந்தனர்.
அதன் ஒரு கட்டமாக, அவர் குறித்த உபயோகரமான தகவல் தெரிவிப்பவர்களுக்கு, 15 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தென் கிழக்கு டில்லியின் அமர் காலனியில் அவர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அதிகாலையில் அவரின் வீட்டுக்கு சென்ற போலீசார், சரணடையுமாறு எச்சரித்தனர்.
அதை கேட்காமல், தப்பி செல்லும் எண்ணத்தில் போலீசார் மீது துப்பாக்கியால் ரிஸ்வான் சுட்டார். பதிலுக்கு போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவரின் வலது காலில் காயம் ஏற்பட்டது.
கீழே விழுந்த அவரை பிடித்த டில்லி போலீசார், மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் பிடிக்கப்பட்டுள்ள தகவல் குறித்து, உத்தர பிரதேச போலீசாருக்கு தெரிவித்தனர்.
ராணுவ வீரரின் உடல்
சொந்த கிராமத்தில் தகனம்
பரீதாபாத்: ஹரியானா மாநிலத்தின் பரீதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மொஹித்குமார், 26, குத்துச்சண்டை போட்டியில் காயம் ஏற்பட்டு இறந்தார். அவர் உடல் நேற்று முழு அரசு மரியாதையுடன், சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.
எட்டு ஆண்டுகளுக்கு முன், ராணுவத்தில் சேர்ந்தவர் மொஹித்குமார். அவர், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சம்பா என்ற இடத்தில் உள்ள ராணுவ பயிற்சி பள்ளியில் சமீபத்தில் தான் சேர்ந்திருந்தார்.
அங்கு ஒரு வீரருடன் குத்துச்சண்டை பயிற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரின் காதில் படுகாயம் ஏற்பட்டு, ரத்தம் வடிந்தது. பரீதாபாதில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று முன்தினம் இறந்தார்.
அவரின் உடல், முழு அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் நேற்று தகனம் செய்யப்பட்டது. திருமணம் ஆகாத அவருக்கு, இரண்டு சகோதரர்கள். இருவரும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். ராணுவத்தில் சேர்ந்து, தேசத்திற்காக தொண்டாற்ற வேண்டும் என்பது அவரின் சிறு வயது தாகம்.
மனைவியை கொன்ற டிரைவர்
துாக்கிட்டு தற்கொலை
குருகிராம்: டில்லி அருகே உள்ள குருகிராம் நகரில், 33 வயது டாக்சி டிரைவர் தீபக்குமார் என்பவர், தன் மனைவியை கொன்று, தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராஜஸ்தானின் ஆல்வார் என்ற பகுதியை சேர்ந்தவர் தீபக்குமார். அவரின் மனைவி சோனம். எட்டாண்டுகளுக்கு முன், காதலித்து மணந்து கொண்ட இவர்களுக்கு, 6 வயதில் மகன் இருந்தார்.
நேற்று காலையில், மது போதையில் வந்த தீபக்குமார் தன் மனைவியை அடித்து கொன்றார். பின், அவரின் உடல் அருகே துாக்கிட்டு, அந்த டிரைவரும் தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.
பைக் - லாரி மோதலில்
பீஹார் டிரைவர் கைது
புதுடில்லி: மோட்டார் பைக்கும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பைக்கில் சென்ற இருவர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, லாரி டிரைவர், பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவுட்டர் நார்த் டில்லியின் நரேலா பகுதியை சேர்ந்தவர்கள் மெஹ்டாப், 34, மற்றும் பர்வீன், 43. உறவினர்களான இருவரும் நேற்று நரேலா அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வேகமாக வந்த, பீஹார் மாநிலத்தை சேர்ந்த அமர்குமார், 29, என்பவர் ஓட்டி சென்ற லாரி, இவர்களின் பைக் மீது மோதியது.
இதில், இருவரும் படுகாயம் அடைந்தனர். அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமர்குமாரை கைது செய்துள்ள போலீசார், கடந்த ஞாயிறு அன்று நடந்த இந்த விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.
2 இடங்களில் பற்றிய தீ
உடனடியாக அணைப்பு
நொய்டா: டில்லி அருகே உள்ள உத்தர பிரதேசத்தின் நொய்டா நகரில் இரண்டு இடங்களில் பற்றிய தீ, உடனடியாக அணைக்கப்பட்டது.
நொய்டா நகரின் செக்டார் 6 அருகே நேற்று காலையில் வீடு ஒன்றுடன் கூடிய சிறிய தொழிற்சாலையில் தீப்பற்றியதாக தகவல் கிடைத்தது. ஐந்து தீயணைப்பு வாகனங்களுடன் அங்கு விரைந்த வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அதுபோல, செக்டார் 2ல் உள்ள பழைய பொருட்கள் விற்கும் கடை ஒன்றில் தீப்பற்றியதாக தகவல் கிடைத்ததும், ஐந்து வாகனங்களில் அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த இரண்டு இடங்களிலும் பற்றிய தீயால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தக்க சமயத்தில் தகவல் கிடைத்த உடன், அங்கு விரைந்த போலீசார், தீயை அணைத்தனர்.
பைக்குடன் வேன் மோதல் தவிர்ப்பு
பள்ளி மாணவர்கள் படுகாயம்
நொய்டா: நொய்டாவில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு நேற்று காலையில் மாணவர்களை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வேனை ராகேஷ் என்பவர் ஓட்டிச் சென்றார். ஒரு திருப்பத்தில் அந்த வேன் மீது மோதுவது போல, பைக் ஒன்று வந்தது. அதை பார்த்ததும், வேன் டிரைவர், திடீரென வேனை திருப்பி, மரத்தில் மோதி நிறுத்தினார்.
'பீடா 2' போலீஸ் நிலைய எல்லையில் இந்த விபத்து நடந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், படுகாயமடைந்த ஆறு பள்ளிக்குழந்தைகளை மீட்டு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.
அங்கு அந்த குழந்தைகளுக்கு முதலுதவி மற்றும் அவசர சிகிச்சைக்கு பின், வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த திடீர் விபத்தால், அந்த பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட நேரத்திற்கு பின் தான், சீரானது.
