வியட்நாமையும் விட்டு வைக்காத கல்மேகி புயல்: 5 பேர் உயிரிழப்பு
வியட்நாமையும் விட்டு வைக்காத கல்மேகி புயல்: 5 பேர் உயிரிழப்பு
ADDED : நவ 08, 2025 12:20 AM
டாக் லக்: பிலிப்பைன்சை சின்னாபின்னாமாக்கிய, 'கல்மேகி' புயல், அண்டை நாடான வியட்நாமையும் தாக்கியதில், ஐந்து பேர் பலியாகினர்.
தாய்லாந்து வளைகுடாவில் உருவான கல்மேகி புயல், தென்கிழக்கு ஆசியா முழுதும் பெரும் பாதிப்பையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் பிலிப்பைன்சை தாக்கிய இந்த புயலால் ஏற்பட்ட மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, அந்நாட்டில் 188க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்; 135 பேர் காணாமல் போயுள்ளனர்.
இதையடுத்து, புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை அந்நாடு தேசிய பேரிடராக அறிவித்துள்ளது.
இந்நிலையில், பிலிப்பைன்சின் அண்டை நாடான வியட்நாமும் கல்மேகி புயலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.
இதனால், வியட்நாமின் ஜியா லாய், டாக் லக் மாகாணங்களைச் சேர்ந்த ஐந்து பேர் பலியாகினர்.
மேலும், குவாங் ஙாய் மாகாணத்தில் உள்ள லி சன் தீவில், கடலில் படகு கவிழ்ந்ததில் மூன்று மீனவர்கள் காணாமல் போயினர். தற்போது கல்மேகி புயல், லாவோஸ் மற்றும் தாய்லாந்தை நோக்கி நகர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இதற்கிடையே, பிலிப்பைன்சை நோக்கி மற்றொரு புயல் நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இது, இன்று அல்லது நாளை சூப்பர் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புயல், நாளை இரவு அல்லது நாளை மறுநாள் அதிகாலை, பிலிப்பைன்சின் வடக்கு லுாசோன் அல்லது மத்திய லுாசோன் பகுதியில் அதி தீவிரத்துடன் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

