ADDED : ஜூன் 16, 2025 01:00 AM

நிக்கோசியா: மேற்காசிய நாடான சைப்ரசுக்கு இரு நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்றார்.
சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாடாக, சைப்ரசுக்கு அவர் நேற்று சென்றார்.
அந்நாட்டின் தலைநகர் நிக்கோசியாவில் உள்ள விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை, அந்நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் நேரில் வரவேற்றார்.
தொடர்ந்து, இரு தரப்பு உறவுகள் குறித்து, சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் உடன் பிரதமர் மோடி ஆலோசிக்க உள்ளார். 20 ஆண்டுகளுக்கு பின், சைப்ரசுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
இது குறித்து, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், 'சைப்ரசுக்கு வந்துள்ளேன். விமான நிலையத்தில் என்னை வரவேற்ற அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்சுக்கு நன்றி.
'இந்தப் பயணம் இந்தியா - -சைப்ரஸ் உறவுகளுக்கு, குறிப்பாக வர்த்தகம், முதலீடு மற்றும் பல துறைகளில் குறிப்பிடத்தக்க உத்வேகத்தை அளிக்கும்' என, குறிப்பிட்டுள்ளார்.
சைப்ரஸ் பயணத்தை இன்று முடித்து, வட அமெரிக்க நாடான கனடாவுக்கு பிரதமர் மோடி செல்கிறார்.
அங்கு கனனாஸ்கிஸ் நகரில் நடக்கும், 'ஜி - 7' உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி பங்கேற்கிறார். மாநாட்டுக்கு இடையே, அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட ஜி - 7 அமைப்பின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.
இதைத் தொடர்ந்து, குரோஷியாவுக்கு செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜோரன் மிலானோவிக்கை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்த உள்ளார்.
டில்லியில் இருந்து புறப்படுவதற்கு முன், பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், 'எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான நம் போராட்டத்தில், இந்தியாவுக்கு உறுதியான ஆதரவை வழங்கியதற்காக, சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய நட்பு நாடுகளுக்கு நன்றி தெரிவிக்க செல்கிறேன்.
'பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் எதிர்ப்பதில் உலகளாவிய புரிதலை ஊக்குவிக்கவும் இந்த சுற்றுப்பயணம் ஒரு வாய்ப்பாக அமையும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.