பாகிஸ்தானில் நீடிக்கும் பதற்றம் டி.எல்.பி., கட்சியை தடை செய்ய முடிவு
பாகிஸ்தானில் நீடிக்கும் பதற்றம் டி.எல்.பி., கட்சியை தடை செய்ய முடிவு
ADDED : அக் 17, 2025 12:14 AM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், டி.எல்.பி., எனப்படும், தெஹ்ரிக் - -இ - -லப்பை கட்சிக்கு தடை விதித்து, வங்கிக் கணக்குகளை முடக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த தெஹ்ரிக் -- இ -- லப்பை என்ற அரசியல் கட்சியினர் காசா மக்களுக்கு ஆதரவாக கடந்த, 10ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாக்.,கின் பஞ்சாப் மாகாணம் லாகூரில் இருந்து இஸ்லாமாபாதில் உள்ள அமெரிக்க துாதரகத்தை முற்றுகையிட ஆயிரக்கணக்கானோர் பேரணியாக செல்ல முயன்றனர்.
அதை தடுக்க முயன்ற போலீசாரின் வாகனங்களை பறித்து, கற்கள் மற்றும் கம்புகளால் தாக்கினர். பதிலுக்கு போலீசார், கண்ணீர் புகை மற்றும் ரப்பர் குண்டுகள் பயன்படுத்தி, அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர்.
இதையடுத்து பஞ்சாபில் முக்கிய சாலைகள் மூடப்பட்டன. இணைய சேவைகள் முடக்கப்பட்டன. இந்த மோதலில் டி.எல்.பி., கட்சியினர், போலீசார் என 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆனாலும் போராட்டத்தை கைவிட அவர்கள் முன்வரவில்லை.
பதற்றம் அதிகரித்து வருவதால் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் தலைமையில், உயர்மட்ட அதி காரிகள் சட்டம், ஒழுங்கு குறித்து ஆலோசனை ந டத்தினர். கூட்டத்தின் முடிவில், தீவிர இஸ்லாமிய அரசியல் கட்சியான தெஹ்ரிக்- - இ- - லப்பைக்கு தடை விதிக்க பரிந்துரை செய்வதென முடிவு செய்தனர்.
டி.எல்.பி.,யி ன் நடவடிக்கைகள் பொது ஒழுங்கு, தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக, பஞ்சாப் முதல்வரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் டி.எல்.பி.,யை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க பாக்., உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்குமாறு வலியுறுத்தி உள்ளனர்.
இதற்கு பாக்., அரசு ஒப்புதல் அளித்தால் டி.எல்.பி.,யின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும். சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.
சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் ஆன்லைன் தளங்கள் தடை செய்யப்படும். முக்கிய தலைவர்கள் மற்றும் 4,500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கைது செய்யப்படலாம்.
கடந்த, 2021-ல் இதேபோன்ற தடை விதிக்கப்பட்டு பின்னர் பகுதியாக நீக்கப்பட்டது. அமெரிக்காவும் இதனை பயங்கரவாத அமைப்பாக அறி வித்து, பின்னர் 2021-ல் பட்டியலில் இருந்து நீக்கியது.