அமெரிக்க மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது!: ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்தமாட்டோம்
அமெரிக்க மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது!: ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்தமாட்டோம்
UPDATED : அக் 17, 2025 12:00 AM
ADDED : அக் 16, 2025 11:20 PM

புதுடில்லி : ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்த சில மணி நேரங்களில் மத்திய அரசு பதிலடி தந்துள்ளது. 'நுகர்வோரின் நலன்களை பாதுகாப்பதே இந்தியாவின் முன்னுரிமை. எனவே, எரிசக்தி இறக்குமதி கொள்கையில் மாற்றம் செய்ய முடியாது' என, மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கடந்த 2022 பிப்ரவரி முதல் ரஷ்யாவுக்கும், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் களமிறங்கின; ரஷ்யா மீது பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.
வர்த்தக தொடர்பு
இதையடுத்து, ரஷ்யாவிடம் மேற்கொண்டு வந்த கச்சா எண்ணெய் உள்ளிட்ட வர்த்தக தொடர்புகளை இந்நாடுகள் தவிர்த்து வருகின்றன. இதனால், ரஷ்யா உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் இந்தியா உள்ளிட்ட அதன் நட்பு நாடுகளுக்கு வழங்கி வருகிறது.
இந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியால் கிடைக்கும் நிதியை, உக்ரைனுக்கு எதிரான போருக்கு ரஷ்யா பயன்படுத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார்.
மேலும், ரஷ்யாவின் வருவாயை தடுக்கும் வகையில், அந்நாட்டிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நம் நாட்டின் மீது கூடுதல் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
மேலும், இவ்வரி விதிப்பை ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அபராதம் என குறிப்பிட்டார்.
ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை தடுக்க, தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட நாடு களுக்கு பல்வேறு வகைகளில் டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார்.
தன் நட்பு நாடுகளான ஐரோப்பிய நாடுகளையும் அவர் கூடுதல் வரி விதிக்குமாறு வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய டிரம்ப், இந்திய பிரதமர் மோடி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்து உள்ளார்.
எரிவாயு இறக்குமதி மேலும், இது குறித்து பேசிய டிரம்ப், 'இதை அவரால் உடனடியாக செய்ய முடியாது. இது ஒரு சிறிய செயல்முறை தான். ஆனால், இந்த செயல்முறை விரைவில் முடிவடையும். இப்போது சீனாவையும் இதே காரியத்தை செய்ய வைக்க வேண்டும்' என தெரிவித்தார்.
இது குறித்து, நம் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியில் இந்தியா உலகளவில் குறிப்பிடத்தக்க இடம் வகித்து வருகிறது. நிலையற்ற எரிசக்தி சூழலில் நுகர்வோரின் நலன்களை பாதுகாப்பதே இந்தியாவின் நிலையான முன்னுரிமை.
எங்கள் இறக்குமதி கொள்கைகள் இந்த நோக்கத்தின் அடிப்படையில் முழுமையாக வழி நடத்தப்படுகின்றன. எனவே, அதில் மாற்றம் செய்ய முடியாது.
மேலும், இந்தியாவின் எரிசக்தி கொள்கையின் இரட்டை இலக்குகளான நிலையான எரிசக்தி விலைகள் மற்றும் பாதுகாப்பான வினியோகங்களை உறுதி செய்வதே எங்களின் முன்னுரிமை.
நாட்டின் எரிசக்தி ஆதாரங்களை விரிவுபடுத்துதல் மற்றும் சந்தை தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான வகையில் பல்வகைப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.
அமெரிக்கா உடனான எரிசக்தி கொள்முதலை பொறுத்தவரை, பல ஆண்டுகளாக விரிவுபடுத்த முயன்று வருகிறோம். அந்த வகையில், கடந்த 10 ஆண்டுகளாக சீரான வகையில் இது முன்னேற்றம் கண்டு வருகிறது.
தற்போதைய அமெரிக்க அரசு, இந்தியா உடனான எரிசக்தி ஒப்பந்தத்தை ஆழப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கான விவாதங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'ரஷ்யா உடனான வர்த்தக உறவுகளை துண்டிக்க இந்தியாவை கட்டாயப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சி சட்டவிரோதமானது. நியாயமற்ற, ஒருதலைபட்சமான இந்த அழுத்தங்களுக்கு அடிபணியாமல், இந்தியா - ரஷ்யா எரிசக்தி ஒத்துழைப்பு தொடரும்' என, ரஷ்ய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வினியோகிக்கும் நாடுகளில் ரஷ்யா தற்போது முன்னிலை வகிக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் ரஷ்யாவிடம் இருந்து நாள் ஒன்றுக்கு, 16.2 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இது, நாட்டின் எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கு.
அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இருந்து, பிரதமர் மோடிக்கு நேற்று எவ்வித தொலைபேசி அழைப்பும் வரவில்லை. இருவரிடையே எவ்வித பேச்சும் நடந்ததாக தெரியவில்லை. ரண்தீர் ஜெய்ஸ்வால் மத்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர்