ஈரான் மீது தாக்குதல்; துவங்கியது இஸ்ரேல் ராணுவம்!
ஈரான் மீது தாக்குதல்; துவங்கியது இஸ்ரேல் ராணுவம்!
UPDATED : அக் 26, 2024 07:59 AM
ADDED : அக் 26, 2024 06:42 AM

ஜெருசலேம்: ஈரானில் உள்ள ராணுவ நிலைகள் மீது துல்லியமான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் துவங்கி உள்ளது. இதனால் மேற்காசியாவில் பதற்றம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நடக்கிறது. இதில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக செயல்படும் அனைத்து தரப்பினர் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துகிறது.
லெபனான் நாட்டில் செயல்படும் ஹிஸ்புல்லா மீது தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், இப்போது ஈரான் மீதும் அதிரடி தாக்குதலை தொடங்கியுள்ளது.
சமூகவலைதளத்தில் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஈரானில் இருந்து பல மாதங்களாக நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும். ஈரானில் உள்ள ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் துல்லியமான தாக்குதல் நடத்தி வருகிறது.
உலகில் உள்ள மற்ற இறையாண்மை கொண்ட நாடுகளைப் போலவே, இஸ்ரேலுக்கும் பதிலளிக்கும் உரிமையும் கடமையும் உள்ளது. எங்கள் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் முழுமையாக அணி திரட்டப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டையும், இஸ்ரேல் மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா எச்சரிக்கை
'ஈரான் அணு உலைகள், எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்த வேண்டாம். அணு உலைகள் மீது எக்காரணம் கொண்டும் தாக்குதல் நடத்தக்கூடாது.
ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மத்திய கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் சூழலை கவனித்து வருகிறோம். ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவின் ஒத்துழைப்போ, ஆலோசனையோ இல்லை' என இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.