ADDED : செப் 21, 2025 12:37 AM

ரபாட்,:நம் ராணுவ அமைச்சர் ராஜ் நாத் சிங், இரண்டு நாள் அரசு முறை பயணமாக மொராக்கோ நாட்டுக்கு செல்கிறார்.
வட ஆப்ரிக்க நாடான மொராக்கோவிற்கு நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று செல்கிறார். நம் ராணுவ அமைச்சர் ஒருவர் மொராக்கோவிற்கு செல்வது இதுவே முதல்முறையாகும்.
இரு நாடுகளுக்கு இடையே வளர்ந்து வரும் உறவை மேலும் வலுப் படுத்துவதே இப்பயணத்தின் முக்கிய நோக்கம் என ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பயணத்தின் போது, அந்நாட்டின் பெர்ரெச்சிட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 'டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ்' நிறுவனத்தின் கவச வாகன உற்பத்தி ஆலையை துவக்கி வைக்கிறார்.
ஆப்ரிக்காவில் துவங்கப்பட்டுள்ள முதல் இந்திய ராணுவ உற்பத்தி ஆலை இதுவாகும். நாட்டின் ராணுவத் துறையில் வளர்ந்து வரும் உலகளாவிய விரிவாக்கத்தை பிரதிபலிக்கும் முக்கிய மைல்கல்லாக இது அமைந்துள்ளது-.
மேலும், மொராக்கோவின் ராணுவ அமைச்சர் அப்தெல்டிப் லவுதியி உடன் இருதரப்பு பேச்சு நடத்துகிறார்.
இதில் இரு நாட்டுக்கிடையேயான ராணுவ ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.