ADDED : செப் 06, 2025 01:04 AM

லண்டன்: வரி சர்ச்சையில் சிக்கிய பிரிட்டன் துணை பிரதமர் ஏஞ்சலா ரெய்னர் தன் பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் துணை பிரதமரும், வீட்டு வசதித்துறை அமைச்சரும், தொழிலாளர் கட்சியின் துணை தலைவருமாக பதவி வகித்தவர் ஏஞ்சலா ரெய்னர், 45. இந்தாண்டு துவக்கத்தில், பிரிட்டனின் தெற்கு கடற்கரை பகுதியில் உள்ள ஹோவ் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கினார். இதற்குரிய முத்திரைத்தாள் கட்டணத்தை குறைவாக செலுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சரியான கட்டணம் செலுத்துவதை உறுதி செய்ய சிறப்பு வரி ஆலோசனையைப் பெற தவறியதன் வாயிலாக, நடத்தை விதிகளை அமைச்சர் மீறியுள்ளது உறுதியானது. இதையடுத்து, ரெய்னர் தன் பதவியை ராஜினாமா செய்தார். இது, கெய்ர் ஸ்டாமரின் அமைச்சரவையின் மறு சீரமைப்புக்கு வழி வகுத்துள்ளது.