உக்ரைனுடன் நேரடி பேச்சில் புடின் இல்லாததால் ஏமாற்றம்
உக்ரைனுடன் நேரடி பேச்சில் புடின் இல்லாததால் ஏமாற்றம்
ADDED : மே 16, 2025 06:48 AM

இஸ்தான்புல்: உக்ரைனுடன் போர் நிறுத்த பேச்சு நடத்த, ரஷ்யா அமைத்துள்ள குழுவில், அதிபர் புடின் பெயர் இல்லை. 'ஜூனியர்'களே குழுவில் இருப்பதால், போர் நிறுத்தத்தில் ரஷ்யா ஆர்வம் காட்டவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடிக்கிறது. போரை நிறுத்துவதற்கான முயற்சியில் அமெரிக்க அதிபராக டிரம்ப் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக, உக்ரைன், ரஷ்யா அதிகாரிகளுடன் அமெரிக்க குழுவினர் தொடர் பேச்சு நடத்தினர். இதனால், 30 நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, மேற்காசிய நாடான துருக்கியின் இஸ்தான்புல் நகரில், ரஷ்யா, உக்ரைன் இடையே உயர்மட்ட பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சில் பலன் ஏற்படாவிட்டால் ரஷ்யா மீது புதிய தடைகள் விதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ''ரஷ்ய அதிபரை நேரில் சந்திக்க காத்திருக்கிறேன். எந்த பேச்சுக்கும் உக்ரைன் தயார். ரஷ்யாவில் இருந்து யார் வருகின்றனர் என்பதை பார்க்க காத்திருக்கிறேன். அதன்பின், உக்ரைன் நடவடிக்கைகள் குறித்து நான் முடிவு எடுப்பேன்,'' என்றார்.
ஆனால், அனைவரின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கும் வகையில், ரஷ்ய குழுவில் அதிபர் புடின் பெயர் இல்லை. புடினின் நம்பிக்கைக்குரிய உதவியாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் ஜூனியர் அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டுமே இருப்பதால், போர் நிறுத்தத்தில் ரஷ்யா ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது.