உங்க அரசியலை எங்ககிட்ட காட்டாதீங்க: பாக்., தலைவர்களுக்கு பயங்கரவாதி மிரட்டல்
உங்க அரசியலை எங்ககிட்ட காட்டாதீங்க: பாக்., தலைவர்களுக்கு பயங்கரவாதி மிரட்டல்
ADDED : ஜூலை 08, 2025 06:58 AM

இஸ்லாமாபாத்: 'இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீத், மசூத் அசார் ஆகியோரை நாடு கடத்துவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை' என்று,பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோ கூறியதற்கு, ஹபீஸ் சயீத் மகன் காட்டமாக பதில்அளித்துள்ளார்.
பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு உதவிகளை செய்து வருகிறது என்பது நீண்ட நாள் குற்றச்சாட்டாகவே இருக்கிறது. அதிலும், லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து, அதன் தலைவர்களை அங்கு மறைத்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், 'இந்தியாவுடன் அமைதி பேச்சு நடத்துவதற்கு தேவைப்பட்டால், ஹபீஸ் சயீத், மசூத் அசாரை நாடு கடத்துவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை' என்று, பாக்., முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சமீபத்தில் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார். இந்த கருத்துக்கு, ஹபீஸ் சயீதின் மகன் தல்ஹா சயீத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
வெளியுறவு கொள்கையில் பிலாவல் புட்டோ ஓர் நம்பகமான நபர் அல்ல. அவர் ஒரு உண்மையான முஸ்லிம் அல்ல. என் தந்தையை நாடு கடத்தலாம் என எப்படி சொல்ல முடியும்? உங்களுடைய அரசியலை எங்களிடம் காட்டாதீர்கள். எங்களுக்கு பாதுகாப்பாக இல்லாமல், எதிரிகளிடம் ஒப்படைப்பதாக எப்படி கூறலாம்? இவரிடம் அரசு பொறுப்பை ஒப்படைத்தால் என்னவாகும்? இவ்வாறு அவர் கூறினார்.