உரிமம் இல்லாத சாட்டிலைட் போனுடன் இந்தியா செல்ல வேண்டாம் : பிரிட்டன்
உரிமம் இல்லாத சாட்டிலைட் போனுடன் இந்தியா செல்ல வேண்டாம் : பிரிட்டன்
ADDED : ஜன 01, 2025 03:56 AM

லண்டன் : 'உரிமம் இல்லாத 'சாட்டிலைட் போன்' உடன் இந்தியா செல்ல வேண்டாம்' என பிரிட்டன் மக்களுக்கு, அந்த நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
'சாட்டிலைட் போன்' என்பது செயற்கைக்கோள் வாயிலாக இணைக்கப்பட்டு, ரேடியோ அலை வழியாக இயக்கப்படும் மொபைல் போன். இந்த வகையான போன்களை உரிமம் இன்றி பயன்படுத்த, நம் நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு சிலர் சட்டவிரோதமாக அதை பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 'இந்தியா செல்லும் பிரிட்டன் குடிமக்கள், உரிமம் இன்றி சாட்டிலைட் போன்களை எடுத்துச் செல்ல வேண்டாம்' என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் சட்டவிரோதமாக சாட்டிலைட் போன் வைத்திருந்த பிரிட்டன் மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிமம் இன்றி செயற்கைக்கோள் வாயிலாக இணைக்கப்பட்டுள்ள சாதனங்களுக்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அது போன்ற தொலைத் தொடர்பு சாதனங்களை எடுத்துச் செல்லும் நபர்கள், பிரிட்டனில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று எடுத்துச் செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

