அமெரிக்காவை உலுக்கிய நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி
அமெரிக்காவை உலுக்கிய நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி
UPDATED : டிச 07, 2024 03:14 AM
ADDED : டிச 07, 2024 02:09 AM

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கபட்டது. ஒன்றரை மணி நேரத்துக்குப் பின் அது திரும்பப் பெறப்பட்டது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. சான் பிரான்சிஸ்கோ வரை நீடித்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானது. இந்த நிலநடுக் கத்தால், அங்கிருந்த கட்டடங்கள் குலுங்கின.
குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்களிலும், வீதிகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டது. சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தால், வீடுகளில் இருந்தவர்கள் அலறியபடி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
சில கட்டடங்கள் சேதமடைந்தன; வீடுகளில் விரிசல் ஏற்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததால், குறைந்த அளவே சேதம் ஏற்பட்டதாக கலிபோர்னியா மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மான்டேரி விரிகுடாவின் வடக்கே, கடலோரப் பகுதிகளில் 800 கி.மீ., துாரத்துக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, அப்பகுதி களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடலோரப் பகுதிகளில் இருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மீட்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. நிவாரணப் பணிகள் மேற்கொள்ள அவசரகால நிலையையும் கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம் அறிவித்தார்.
சுனாமிக்கான அறிகுறிகள் எதுவும் தென்படாததை அடுத்து, ஒன்றரை மணி நேரத்துக்குப் பின் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. இதைஅடுத்து, மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினர்.