ஈக்வடார் சிறையில் ஏற்பட்ட வன்முறை ஒரு போலீஸ், 13 கைதிகள் பலி
ஈக்வடார் சிறையில் ஏற்பட்ட வன்முறை ஒரு போலீஸ், 13 கைதிகள் பலி
ADDED : செப் 23, 2025 11:04 PM
குயட்டோ: ஈக்வடார் நாட்டு சிறையில் வெடித்த வன்முறை சம்பவத்தில் ஒரு சிறை காவலர், 13 கைதிகள் கொல்லப்பட்டனர்.
தென் அமெரிக்க நாடான ஈக்வடார், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சிறைகளில், கைதிகள் இடையே வன்முறை அடிக்கடி நிகழ்கிறது. மச்சாலா நகரில் உள்ள சிறையில் இரண்டு கும்பல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
துப்பாக்கிச் சூடு நடத்தியும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில், 13 கைதிகள், ஒரு சிறை காவலர் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவத்தை பயன்படுத்தி சில கைதிகள் தப்பிச் சென்றனர். அவர்களில், 13 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருக்கும், 'லாஸ் லோபோஸ் பாக்ஸ்' என்ற குற்ற கும்பல் தான் இந்த வன்முறைக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.