சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் விடப்பட்டதில் அரசியல் காரணம்: எலான் மஸ்க்
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் விடப்பட்டதில் அரசியல் காரணம்: எலான் மஸ்க்
ADDED : பிப் 19, 2025 12:47 PM

வாஷிங்டன்: ''அரசியல் காரணங்களுக்காகவே விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி மையத்திலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது,'' என எலான் மஸ்க் கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பும், எலான் மஸ்க்கும் அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, எலான் மஸ்க் கூறியதாவது: சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளியிலேயே கைவிடப்பட்டனர் என நான் நினைக்கிறேன். தற்போது அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களை விரைவாக அழைத்து வருவதற்கான பணிகளை துரிதப்படுத்தி உள்ளோம். அரசியல் காரணங்களுக்காக அவர்கள் விண்வெளி மையத்திலேயே விடப்பட்டனர். இது நல்ல செயல் கிடையாது.
கடந்த காலங்களில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விஞ்ஞானிகளை அழைத்து வந்தது போல், இம்முறையும் அவர்களை வெற்றிகரமாக அழைத்து வருவோம். அரசியல் சம்பந்தப்பட்ட முடிவுகளில் நான் தலையிட மாட்டேன். அதிபரிடம் நான் எதுவும் கேட்டது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
டிரம்ப் கூறியதாவது: கொள்கை முடிவுகளில் எலான் மஸ்க் தலையிட மாட்டார். தனியார் நிறுவனங்களில் அவர் பணிபுரிவதால், அரசு திட்டங்களில் அவரை பணி செய்ய அனுமதிக்க மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.