ADDED : நவ 07, 2024 02:32 PM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவரது ஆதரவாளரான எலான் மஸ்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.2.19 லட்சம் கோடி (26.5 பில்லியன் டாலர்) உயர்ந்துள்ளது.
அமெரிக்க அதிபராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, மீண்டும் பதவியேற்க உள்ளார். தேர்தலில் அவரை, உலகின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் மிகவும் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்தார். பிரசாரத்துக்கு 375 கோடி ரூபாய் அளவுக்கு நிதியும் வழங்கினார். தேர்தல் பிரசாரக்களத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமைச்சர் பதவி அல்லது வெள்ளை மாளிகையில் ஆலோசகர் பதவி கொடுப்பேன் என எலான் மஸ்கிற்கு டிரம்ப் உறுதி அளித்து இருந்தார். டிரம்பின் அறிவிப்புக்கு எலான் மஸ்க் வரவேற்பு தெரிவித்தார்.
முழு ஆதரவு
வெளிப்படையான ஆதரவு போதாது என்று தினமும் தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் டிரம்புக்கு ஆதரவான கருத்துகளை எலான் மஸ்க் வெளியிட்டுக் கொண்டே இருந்தார். அவரின் இந்நடவடிக்கை டிரம்பின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மாறியது எனலாம். தேர்தல் பிரசாரத்தில், அமெரிக்க முன்னேற்றம் பற்றிய தமது எதிர்கால திட்டங்களை டிரம்ப் அறிவித்தாலும் எலான் மஸ்கின் முழு ஆதரவு முக்கிய திருப்பமாக அமைந்தது என கூறலாம்.
ரூ.2.19 லட்சம் கோடி
அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவரது ஆதரவாளரான எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன பங்குகள் விலை உயர்ந்துள்ளது. இதனால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.2.19 லட்சம் கோடி (26.5 பில்லியன் டாலர்) உயர்ந்துள்ளது. டிரம்பின் வெற்றியால் மஸ்க் மட்டும் ஆதாயம் அடைந்ததில்லை. அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், உலகின் இரண்டாவது பணக்காரர், அவரது சொத்து மதிப்பும் அதிகரித்துள்ளது. நேற்று அமெரிக்க பங்குச் சந்தைகள் கிடுகிடுவென உயர்வை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.