இந்திய தேர்தல் நடைமுறை எலான் மஸ்க் திடீர் பாராட்டு
இந்திய தேர்தல் நடைமுறை எலான் மஸ்க் திடீர் பாராட்டு
ADDED : நவ 24, 2024 11:50 PM
வாஷிங்டன்: இந்தியாவில் ஓட்டு எண்ணும் நடைமுறையை பாராட்டிய உலகப் பணக்காரர்களில் ஒருவரான தொழிலதிபர் எலான் மஸ்க், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஓட்டுகள் எண்ணப்படுவதில் நிலவும் தாமதத்தை விமர்சித்தார்.
அமெரிக்காவில், கடந்த 5ல் நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
அமெரிக்காவில் தேர்தலுக்கு ஓட்டுச்சீட்டு முறை பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், மிகப்பெரிய மாகாணமான கலிபோர்னியாவில், ஓட்டு எண்ணிக்கை துவங்கி, 20 நாட்களாகியும் இன்னும் அந்தப் பணி முடிவடையவில்லை.
அந்நாட்டு தேர்தல் கமிஷனின் புள்ளி விபரப்படி, 3,00,000 ஓட்டுகள் எண்ணப்படாமல் உள்ளன. ஓட்டுச் சீட்டுகளில் வாக்காளர்களின் கையெழுத்து சரிபார்ப்பு, வரிசைப்படுத்துவது போன்றவற்றால், ஓட்டு எண்ணிக்கை தாமதமாவதாகக் கூறப்படுகிறது.
நம் நாட்டில் கடந்த ஏப்., - மே மாதங்களில் நடந்த லோக்சபா தேர்தலில், 64 கோடி ஓட்டுகள் பதிவாகின. இவை, ஒரே நாளில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. நம் நாட்டில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், 'இந்தியா ஒரு நாளில் 64 கோடி ஓட்டுகளை எப்படி எண்ணியது' என்ற தலைப்பில் ஊடகத்தில் வெளியான செய்தியை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, எலான் மஸ்க் வெளியிட்ட பதிவில், 'இந்தியாவில், ஒரே நாளில், 64 கோடி ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.
'ஆனால் கலிபோர்னியாவில் இன்னும் ஓட்டுகள் எண்ணப் பட்டு வருகின்றன' என விமர்சித்தார்.