உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம்: அமெரிக்க அதிபரிடம் மேக்ரோன் வலியுறுத்தல்
உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம்: அமெரிக்க அதிபரிடம் மேக்ரோன் வலியுறுத்தல்
ADDED : பிப் 18, 2025 08:26 AM

பாரிஸ்: உக்ரைன்- ரஷ்யா போருக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த போர் நடந்து வருகிறது. அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சு நடத்தி, போரை முடிவுக்கு கொண்டு வரவுள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
அமெரிக்க மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் இன்று பேச்சு நடத்தவுள்ளனர். இந்த பேச்சு வார்த்தைக்கு, ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள், உக்ரைன் அரசு பிரதிநிதிகள் ஆகியோர் அழைக்கப்படவில்லை.
நாங்கள் கலந்து கொள்ளாத பேச்சுவார்த்தையில் ஏற்படும் எந்த முடிவையும் ஏற்க மாட்டோம் என்று உக்ரைன் அதிபர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.அதேபோல, ஐரோப்பிய நாடுகளும், டிரம்ப் தன்னிச்சையாக நடத்தும் பேச்சுவார்த்தை குறித்து கவலை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இது குறித்து, இம்மானுவேல் மேக்ரான் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். இதை அடைய, ரஷ்யா தனது ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். மேலும் உக்ரைன் மக்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை அளிக்க வேண்டும்.
இல்லையெனில், இந்த போர்நிறுத்தம் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடையும் அபாயம் உள்ளது. அனைத்து ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள் மற்றும் உக்ரைனியர்களுடன் இணைந்து இதில் பணியாற்றுவோம். இது தான் முக்கியம். உக்ரைனை ஆதரிப்பதிலும், நமது பாதுகாப்பை வளர்ப்பதிலும், முதலீடு செய்வதிலும் பணிகள் தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

