ADDED : மே 04, 2025 04:08 AM

டாக்கா: வங்கதேசத்தில், முஸ்லிம் பெண்களுக்கு சொத்து உட்பட பல்வேறு விவகாரங்களில் சம உரிமை அளிக்க பரிந்துரை செய்யப்பட்டதற்கு எதிராக, முஸ்லிம் அமைப்பினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு உள்ளது.
இங்குள்ள முஸ்லிம் பெண்களுக்கு சொத்து உட்பட பல்வேறு விவகாரங்களில் சம உரிமை அளிக்க, சீர்திருத்த கமிஷன் அரசுக்கு பரிந்துரை செய்தது.
இந்நிலையில், இந்த பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைநகர் டாக்காவில் உள்ள டாக்கா பல்கலை அருகே, ஹெபாசாத் - இ- - இஸ்லாம் என்ற முஸ்லிம் அமைப்பினர் நேற்று போராட்டம் நடத்தினர். இதில் முஸ்லிம் பெண்கள் உட்பட, 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த அமைப்பின் மாமுனுல் ஹக் கூறுகையில், ''முஸ்லிம் பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். மேற்கத்திய கலாசாரத்தை இங்கு புகுத்தக் கூடாது.
''பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளை அரசு புண்படுத்தி உள்ளது. எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், மே 23ல், நாடு முழுதும் பேரணி நடத்தப்படும்,'' என்றார்.