உக்ரைனில் அமைதி ஏற்படுவதை ஐரோப்பிய தலைவர்கள் தடுக்கின்றனர்: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் குற்றச்சாட்டு
உக்ரைனில் அமைதி ஏற்படுவதை ஐரோப்பிய தலைவர்கள் தடுக்கின்றனர்: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் குற்றச்சாட்டு
ADDED : ஆக 26, 2025 06:52 AM

மாஸ்கோ; ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் உக்ரைனில் அமைதி ஏற்படுவதை தடுக்கின்றனர் என, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் மூன்று ஆண்டுகளைத் தாண்டியுள்ளது. போரை நிறுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனாலும் இழுபறி நீடிக்கிறது.
ஆர்வமில்லை இந்த விவகாரம் தொடர்பாக, அமெரிக்காவைச் சேர்ந்த, என்.பி.சி., என்ற தனியார் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோப் கூறியுள்ளதாவது:
உக்ரைனில் அமைதி ஏற்படுவதை, ஐரோப்பிய தலைவர்கள் விரும்பவில்லை என்பதையே அவர்களின் சமீபத்திய செயல்பாடுகள் தெரிவிக்கின்றன. வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன், சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்தித்தினர்.
அதன்பிறகான அவர்களுடைய செயல்கள் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஆர்வமில்லை என்பதற்கு ஆதாரமாக உள்ளன.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அமைதி பேச்சுக்கான முயற்சிகளை ரஷ்யா மதிக்கிறது. ரஷ்யாவின் பாதுகாப்பு குறித்து கவலைப்படாமல், உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை முன்னுரிமையாக்குவதில் ஐரோப்பிய தலைவர்களின் வலியுறுத்தல்கள், பேச்சுகளை சிக்கலாக்குகின்றன.
ராஜதந்திரம் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இருவரும் பரஸ்பரம் மரியாதை கொண்டுள்ளனர். அதிபர் புடின் உக்ரைன் உடன் அமைதியையே விரும்புகிறார். இதன் காரணமாகவே, அலாஸ்காவில் நடந்த பேச்சுக்கு ஒத்துழைப்பு அளித்தார். மேலும், உக்ரைன் மீதான தாக்குதல்கள் ரஷ்யாவின் தற்காப்புக்கானதாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறியுள்ளதாவது: போரை முடிவுக்கு கொண்டு வருவதில் திறந்த மனதுடன் ஒத்துழைப்பு வழங்கிய ரஷ்யா, அங்கீகாரத்துக்கு தகுதியானது. ஒரே நாளில் போருக்கு தீர்வு காண முடியும் என்ற டிரம்பின் கூற்றை ஏற்றுக்கொண்ட ரஷ்யாவை பாராட்ட வேண்டும்.
போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ரஷ்யா இன்னமும் முழுமையாக உறுதியளிக்கவில்லை. மேலும், புடின், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இடையே எவ்வித சந்திப்புக்கும் தற்போது திட்டமிடப்படவில்லை.
ஆனால், போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க பொருளாதாரத் தடைகள் ஒரு வாய்ப்பாக உள்ளது. இருப்பினும், ராஜதந்திரம் என்பது ஒரு நீண்ட செயல்முறையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.